தக் லைஃப் படத்தின் கதை
ரங்கராய சக்திவேல் என்ற கேங்ஸ்டரின் கதையைத்தான் தக் லைஃப் படம் சொல்கிறது. ரங்கராய சக்திவேலின் வாழ்க்கையில் அமர் என்ற சிறுவன் எப்படி வருகிறான் என்ற ஒரு பெரிய காட்சியுடன் படம் தொடங்குகிறது. அந்தக் காட்சியில் அமர் தன் தந்தையை இழக்கிறான், தங்கை சந்திராவைப் பிரிகிறான். அங்கிருந்து அமரும் சக்திவேலும் சேர்ந்து பயணிக்கின்றனர். இந்தப் பயணம் எங்கிருந்து தொடங்கியதோ அங்கேயே முடிகிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
தக் லைஃப் விமர்சனம்
சரியான உணர்ச்சிகரமான தருணங்களுடன், கதாபாத்திரங்களின் நடிப்பிலும், பிரேம்களிலும் ரசிகர்களைக் கவரும் வழக்கமான மணிரத்னம் பாணியில் இந்தக் கேங்ஸ்டர் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசனை, ரசிகர்களின் விருப்ப நாயகனாகக் காட்டும் அழகு பல இடங்களில் தெரிகிறது. ஒரு பக்கம் மனைவி அபிராமி மறுபக்கம் திருமணத்தை தாண்டிய உறவு. அப்படிப்பட்ட ஒரு உறவுதான் த்ரிஷாவின் இந்திராணி - ரங்கராஜ்.
தக் லைஃப் படத்தின் ப்ளஸ் என்ன?
பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், கமலுக்கு இணையாக நிற்கும் கதாபாத்திரம் சிலம்பரசனின் அமர் கேரக்டர். ஒரு அடியாளாக இருந்து, இரண்டாம் பாதியில் சக்திவேலில் இடத்தை பிடிக்க இந்தக் கதாபாத்திரம் முயற்சிக்கிறது. திரையில் அதிக நேரம் இல்லாவிட்டாலும், பீட்டர் என்ற வேடத்தில் அசத்தியிருக்கிறார் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். குறிப்பாக கமலுடனான சண்டைக் காட்சி வேறலெவல். ரங்கராய சக்திவேலின் மனைவி ஜீவாவாக அபிராமி தன் வேடத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். கமலுடனான சமையலறைக் காட்சியில் அபிராமி அருமையாக நடித்திருக்கிறார். நாசர், அசோக் செல்வன், அலி ஃபைசல் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உண்டு.
தக் லைஃப் இசை கவர்ந்ததா?
ஏ.ஆர்.ரகுமானின் இசை வழக்கம்போல் மணிரத்னம் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. பாடல்களின் பயன்பாடு பெரும்பாலும் கதைக்குப் பொருத்தமாகவே உள்ளது. ஒன்பது பாடல்கள் இருந்தாலும், படத்தில் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இடைவேளைக்கு முந்தைய முக்கியமான காட்சியில் பயன்படுத்தப்படும் பின்னணி இசை அருமை.
தக் லைஃப் எப்படி இருக்கு?
ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு, அன்பறிவின் சண்டைப் பயிற்சி ஆகியவை படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. புதுமைகளைக் காட்ட முயற்சிப்பதற்கு அப்பால், பல கேங்ஸ்டர் படங்களில் பார்த்துப் பழகிய காட்சிகள் தக் லைஃப்பிலும் உண்டு. எனவே, இந்த தக் லைஃப் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யுமா என்பது சந்தேகமே.