HEADER
Tuesday, 9 September 2025
2025-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் எந்தெந்த படங்கள் உள்ளது என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவிற்கு 2025-ம் ஆண்டு எதிர்பார்த்தபடி இல்லாவிட்டாலும் இந்த ஆண்டு தொடர்ச்சியாக ஒரு ஹிட் படத்தை கோலிவுட் கொடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 8 மாதங்களில் வெளியான படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் அஜித்தின் இரண்டு படங்களும் இடம்பெற்று இருக்கின்றன. இதில் அதிக வசூல் அள்ளிட படம் எது என்பதை விரிவாக பார்க்கலாம்.
5. தலைவன் தலைவி
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படம் தலைவன் தலைவி. 5வது இடத்தில் உள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்த தலைவன் தலைவி திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.64.75 கோடி வசூலித்து இருந்தது.
4. டிராகன்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், ஹர்ஷத் கான், விஜே சித்து, மிஷ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 70 கோடி வசூலித்து நான்காம் இடத்தில் உள்ளது.
3. விடாமுயற்சி
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தில் திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 93 கோடி வசூலித்து இந்த பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.
2. கூலி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் உபேந்திரா, அமீர்கான், செளபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 148.8 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
1. குட் பேட் அக்லி
இந்த பட்டியலில் முதலிடத்தை அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் பிடித்திருக்கிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சிம்ரன், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 195.78 கோடி வசூலித்து இருந்தது.