மன்னு, சல்வா :-
وَظَلَّلْنَا عَلَيْکُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰى كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَمَا ظَلَمُوْنَا وَلٰـكِنْ كَانُوْآ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
மேலும் நாம் உங்கள் மீது மேகத்தை நிழலிடும்படிச் செய்தோம். உங்களுக்கு மன்னுஸல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள்(என்றும் உங்களிடம் கூறினோம்). எனினும் (உங்கள் மூதாதையர் வரம்பு மீறினார்கள்; அதன் மூலம்) அவர்கள் எமக்கு அநீதி இழைக்கவில்லை; மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டனர்.
(அல்குர்ஆன் : 2:57)
மன் என்றால் என்ன ?
மன் என்றால் அருள், தயாளம், பெருந்தன்மை எனப்பொருள். ஆனால் மன்னூ என்னும் சொல் இங்கே குறிப்பிடுவது இஸ்ரவேலர்களுக்கு இறைவன் புறத்தில் இருந்து வழங்கப்பட்ட ஒரு சிறப்பு உணவை குறிக்கிறது. சினாய் பள்ளதாக்கில் தன் வற்றாக்கருணையினால் இறைவன் அவர்களுக்கு இந்த உணவை வழங்கினான். இந்த உணவை பெறுவதற்காக அவர்கள் நிலத்தை பயன்படுத்தவில்லை எதுவும் செய்யாமல் அவர்களுக்கு இந்த உணவு விலை இல்லாமல் உழைப்பில்லாமல் கிடைத்தது.
சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக் கொண்டது. விடியற்காலத்தில் பாளையத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது. பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ வனாந்திரத்தின் மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின்மேல் கிடந்தது. இஸ்ரவேல் புத்திரர் அதைக்கண்டு அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி : இது கர்த்தர் உங்களுக்கு புசிக்கக் கொடுத்த அப்பம்... அதை விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போம். (யாத்திராகமம் அத் : 16 வச : 13-15,21)
பனிப்படலம் போன்ற உணவு அது என்பதை இதன் மூலம் விளங்குகிறோம். பாலிப்பயிர்களில் மணிகளைப்போல அப்பனிபடலம் நிலத்தின்மீது படர்ந்து காணப்படும். காலை கதிரவனின் ஒளி தீவிரம் அடைவதற்கு முன்னால் அதனை சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும். கதிரவனின் ஒளிபடத் தொடங்கிவிட்டால் மணிமணிகளாக காட்சி அளிக்கும் அந்த உணவு உருகிப்போய்விடும். இந்த உணவை உழைப்பில்லாமல் கஷ்டப்படாமல் விலை செலுத்தாமல் இறைவனின் புறத்தில் இருந்து அருளாக அருட்கொடையாக உழைப்பதற்கோ உணவை ஈட்டுவதற்கோ வழியோ வாய்ப்போ இல்லாத சினாய் பள்ளதாக்கில் அவர்களுக்குக் கிடைத்தால் இந்த உணவு மன்னு என்னும் பெயரைப்பெற்றது. ( அரபு மொழியும் இப்ரானி மொழியும் ஒரே மொழிப் குடும்பத்தைச் சார்ந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)
மன்னு என்ற பெயர்வர இது தான் காரணமாக இருக்கும் என்றே படுகின்றது. ஆனால் மேற்கண்ட தவ்ராத்தின் மேற்கோள் மூலமாக ஒரு விஷயம் விளங்குகின்றது வியப்பளிக்கும் இந்த விநோத உணவைக் கண்ட இஸ்ரவேலர்கள் தங்களுக்குள்ளாக கேள்விகளை எழுப்பி கொண்டார்களாம். மன் ஹூவ என்ன இது ? இந்த கேள்விதான் மருவி மன்னு என்றாகி விட்டதாம் ஆனால் இந்த பெயர்காரணம் கொஞ்சமும் பொருத்தமானதாக நமக்கு படவில்லை. மொழியும் அதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றது. அறிவும் அதனை ஏற்காமல் நிராகறிக்கின்றது. அப்பம் என இந்த உணவை மூஸா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே இது ரொட்டியைப்போன்று இது இருந்திருக்கும் என எண்ணலாகாது. அப்பமும் ரொட்டியும் உணவு என்னும் பொருளிலேயே கையாளப்படுகின்றது. உணவு, சாப்பாடு என்பதைக் குறிக்க பல மொழிகளிலும் ரொட்டி எனும் சொல்லை பயன்படுத்துகிறார்கள். உருது போன்ற பல இந்திய மொழிகளிலும் இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது.
சல்வா என்றால் என்ன ?
சல்வா என்பதன் பொருள்
மன்னு என்பதை போன்றே சல்வா என்னும் சொல்லும் வேதக்காரர்கள் வழியாகத் தான் அரபிமொழிக்கு வந்துசேர்ந்தது. அரபுக்கள் இச்சொல்லை தங்கள் கவிதைகளிலும் பயன்படுத்தி உள்ளனர். சினாய் பள்ளதாக்கில் இஸ்ரவேலர்களுக்கு இறைவன் ஏற்பாடு செய்துகொடுத்த ஒரு பறவை இனம் அது. அப்பறவையை வெகு எளிதாக வேட்டையாடி பிடித்துக் கொள்ளலாம். யாத்திராகமம் அதிகாரத்தில் இச்செய்தி விளக்கமாக எடுத்து உரைக்கப்படுகிறது. இஸ்னவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் ஏலிமைவிட்டு பிரயாணம் பண்ணி, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சினாய்க்கும் நடுவே இருக்கிற சீன்வனாந்தரத்தில் சேர்ந்தார்கள். அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நாங்கள் இறைச்சி பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்த கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்து வந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்............ கர்த்தர் மோசேயை நோக்கி : இஸ்ரவேல் புத்திரர்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சிகளை புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார். சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளையத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளையத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது. ( யாத்திராகமம் 16:1-13)
"உண்ணுங்கள் நாம் உங்களுக்கு வழங்கியுள்ள தூய பொருட்களிலிருந்து" இதுபோன்ற இடங்களில் குல்னா என்னும் சொல் மறைத்துள்ளதாக குர்ஆன் விரிவுரையாளர்கள் கணிக்கிறார்கள் அதாவது "இந்த பொருட்களை நாம் அவர்களுக்கு வழங்கினோம். உண்ணுங்கள், நாம் உங்களுக்கு வழங்கிய தூய பொருட்களிலிருந்து என அவர்களிடம் சொன்னோம்." இதுபோன்ற இடங்களில் 'சொன்னோம்' , 'சொன்னான்' என்னும் சொல்லை வெளிப்படையாக சொல்லாமல் மறைத்து விடுவதில் ஒரு மொழி நுட்பம் அடங்கி இருப்பதாக நாம் கருதுகிறோம். அதில் என்னவெனில் அல்லாஹ்வின் ஒவ்வோர் அருட்கொடையும் தனது வடிவம் மற்றும் தோற்றத்தின் மூலமாக பேசுகின்றது. அதாவது காட்சி மொழியால் பேசுகின்றது. இறைவனின் இந்த அருட்கொடையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதை கொடுத்த உங்கள் படைப்பாளனுக்கு நன்றி செலுத்துங்கள் என்று சொல்கின்றது. இந்த நுட்பம் வான்மறை குர்ஆனில் பல்வேறு இடங்களில் விரிவாகவும் கூறப்பட்டுள்ளது. இதே இங்கே நாம் கண்டுள்ளதைப் போல் சில இடங்களில் மறைமுகமாகவும் கூறப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் தென்படுகின்ற ஒவ்வோர் அத்தாட்சிகளிலும் மறைந்துள்ள குறிப்புகளைத் தேடி படித்துக் கொள்ளும் அறிவை பெற்றவர்கள் மிக எளிதாக இந்த அறிவிப்பை வாசித்துவிடுகிறார்கள்.
இவ்வசனத்திற்கு முன்-பின் உள்ள வசனங்களை உற்றுநோக்கினால் இறைவன் தமக்கு வழங்கிய மகத்தான அருட்கொடைகளை இஸ்ரவேலர்கள் உணரவுமில்லை அதன் விளைவாக கடமையாகின்ற உரிமைகளை செலுத்தவுமில்லை என்பதை உணரலாம். அருட்கொடைகளை பெற்றுக்கொண்டு நன்றி செலுத்துவதற்கு பதிலாக மாறு செய்தார்கள். இவ்விஷயம் சொற்களால் இங்கு சொல்லப்படவில்லை. குறிப்பால் உணர்த்தப்படுகின்றது. "அவர்களால் நம்மை ஒன்றும் செய்யமுடியவில்லை. மாறாக தங்களுக்குத்தானே அநீதம் இழைப்பவர்களாகத்தான் அவர்கள் இருந்தார்கள்" என்னும் சொற்றொடர் மூலமாக இக்கருத்து புரியவைக்கப்ப்படுகின்றது.
இறைவன் அருட்கொடை ஏதாவது ஒன்றை பெற்றுக்கொண்டு அதற்கு மதிப்பளிக்காமல் முறையாக பயன்படுத்தாமல், இறைவனுக்கு நன்றி செலுத்தாமல் மனம்போன போக்கில் நடந்து கொள்பவன் இறைவனுக்கு எந்த தீங்கையும் இழைத்துவிடப் போவதில்லை அவனால் இறைவனை ஒன்றுமே செய்ய முடியாது. மாறாக, தனக்கு தானே தீங்கிழைத்து, தன்னைதானே அழித்து நாசம் செய்து கொள்கிறான். மேலே கண்ட பல விஷயங்கள் யூதர்களை நேருக்கு நேராக விளித்து முன்னிலையில் வைத்து சொல்லப்படுகின்றன. ஆனால், இக்கடைசி விஷயம் அவர்களிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு படர்க்கை சொல்லில் கூறப்படுகின்றது. வெறுப்பு! முகம்பார்த்து சொல்லாமல், முகத்தை திருப்பிக் கொண்டு, வேறு எங்கோ பார்த்து சொல்கின்ற அளவிற்கு அவர்களுடைய நடத்தையால் ஏற்பட்ட வெறுப்பு !
நூல் : ததப்புருல் குர்ஆன்
விரிவுரையாளர் : மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்)
மொழிபெயர்ப்பாளர் : Abdurrahman Umari
Post a Comment