HEADER

... (several lines of customized programming code appear here)

Monday, 7 August 2017

மின்சாரம் பாயுற மாதிரி ஒரு இன்டர்வெல் சீன் - 'விவேகம்' சீக்ரெட் பகிரும் கபிலன் வைரமுத்து



``ஒரு பன்னாட்டுக் காவல்துறை - ஒரு சர்வதேச குற்றப் பின்னணி. இந்த இரு துருவங்களுக்குமான மோதல்தான் `விவேகம்'. `இந்த ஒன்லைனுக்கு வொர்க் பண்றீங்களா?'னு சிவா கேட்டார். ஆச்சர்யமும் சந்தோஷமுமா இருந்தது. ஏற்கெனவே `கவண்' படத்தோட திரைக்கதைக்கு வொர்க் பண்ண அனுபவம் இருந்ததால, உடனே ஓகே சொன்னேன். சிவா சார், ஆதிநாராயணன், நான்... மூவரும் `விவேகம்' படத்துக்கான திரைக்கதையை உருவாக்கத் தயாரானோம்!'' என்கிறார் கபிலன் வைரமுத்து. அஜித்தின் `விவேகம்' படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை எழுதியிருப்பதோடு, கதைக்களத்திற்கும், திரைக்கதைக்கும் கரம் கொடுத்திருக்கிறார்.
கபிலன் வைரமுத்து - விவேகம்
``நீங்க பேப்பர்ல எழுதின காட்சிகளைத் திரையில் பார்க்கும்போது எப்படி இருந்தது?"
``சந்தோஷமா இருந்தது. படத்தோட எடிட்டிங் போய்க்கிட்டிருந்தப்போ, `உங்க மனத்திரையில் நீங்க பார்த்த மாதிரி இந்த விஷுவல்ஸ் திரையில் இருக்கா?'னு சிவா சார் கேட்டார். `அதைவிடப் பிரமாதமா வந்திருக்கு'னு சொன்னேன். அஜித் சாரோட பெர்ஃபாமன்ஸ், படத்துல இருக்கிற பாடல்கள், அக்‌ஷராவோட ஆக்‌ஷன் காட்சிகள்னு படத்துல எனக்கு பெர்சனலா பிடிச்ச விஷயங்கள் அதிகம். படத்தோட இடைவேளைக் காட்சியைப் பார்த்தப்போ, உடம்புல மின்சாரம் பாயுற மாதிரி இருந்தது.''
``அஜித் படம், ரசிகர்கள் எப்படி எடுத்துப்பாங்கனு தெரியாது. திரைக்கதை உருவாக்கத்துல கொஞ்சம் பதற்றம் இருந்திருக்குமே?"
``முதல் நாள் அந்தப் பயம் இருந்தது. சிவா சார் ஏற்கெனவே `வீரம்', `வேதாளம்'னு அஜித் சாரோட ரெண்டு படங்களை இயக்கியதால, ஆடியன்ஸ் என்ன எதிர்பார்ப்பாங்க, அஜித் ரசிகர்களுக்கு என்ன தேவை, அஜித் சாரோட கேரக்டரை எப்படி வடிவமைக்கணும்னு எல்லாம் தெரிஞ்சிருந்தது. அதனால, எங்களுக்கு இருந்த பதற்றத்தை அவர் பொறுப்புல எடுத்துக்கிட்டார். ஆனா, `இது அஜித் ரசிகர்களுக்கான படமா மட்டும் இருக்கக் கூடாது. பொதுவான ரசிகர்கள் தியேட்டருக்கு வரணும். அவங்களும் படத்தைப் பாராட்டணும்'னு சொன்னார். அந்தப் பொறுப்பை நாங்க சரியா பண்ணியிருக்கோம்னு நம்புறேன். நிறைய விஷயங்களை சிவா சார் பாராட்டினார். என் எழுத்துமேல எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனா, அந்த எழுத்தைச் சந்தைப்படுத்துறதுக்கு எனக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டது. `கவண்' மூலமா கே.வி.ஆனந்த் சார் அதைத் தொடங்கிவைத்தார். சிவா சாரோட வொர்க் பண்ண பிறகு சினிமாவோட நட்சத்திர முகத்தைப் புரிஞ்சிக்க முடிஞ்சது.''
கபிலன் வைரமுத்து - விவேகம்
``டீஸர்ல அஜித் பேசுற நீளமான வசனம் யாரோட ஐடியா?"
``சிவா சாரோடது. `சிவா - அஜித்'ங்கிற கூட்டணியோட ஸ்பெஷலே வசனம்தான். அஜித்துக்கு சிவா சார் எழுதுற வசனம் அவ்ளோ ஸ்பெஷலா இருந்தது. `சிவா பூஜையில எதுக்கு கரடி'னு அந்த ஏரியாவை நான் தொடலை!''
`` `காதலாட...' பாட்டு படத்தோட எந்த சிச்சுவேஷன்ல வருது?"
``அஜித்தும் - காஜல் அகர்வாலும் கணவன்-மனைவி. அவங்க வர்ற காட்சிகளுக்காக உருவான பாட்டு இது. தவிர, இந்தப் பாடல் இந்தப் படத்தோட ஆன்மானு சொல்லலாம். பாடல்கள் மட்டுமல்ல, படத்துல வர்ற எல்லாமே கமர்ஷியலா மட்டும் கடந்துபோயிடாம, உணர்வுபூர்வமா இருக்கணும்னு உழைச்சிருக்கோம். படத்துக்காக முதல்முதல்ல கம்போஸ் பண்ண பாட்டு இதுதான். திரைக்கதையிலேயும் வொர்க் பண்ணதுனால, பாடலோட சூழலை எளிமையாப் புரிஞ்சுக்கிட்டு எழுத முடிஞ்சது.''
``அஜித்?"
``படத்தைப் பற்றிப் பேசினதைவிட, பொதுவா நிறைய விஷயங்கள் பேசினோம். குறிப்பா `முடிவெடுத்தல்' பற்றிச் சொன்னார். `இன்னிக்கு நாம இந்த இடத்துல இருக்கிறதுக்கு, என்னிக்கோ எடுத்த ஒரு முடிவு காரணமா இருக்கும். இன்னிக்கு நாம எடுக்கிற முடிவுதான், நாளைக்கு நாம எப்படி இருக்கப்போறோம்னு தீர்மானிக்கும்' இது அஜித் சார் சொன்ன அர்த்தமுள்ள வரிகள். தவிர, `மனித நாகரிகம்'ங்கிற டாபிக்ல நிறைய விஷயம் ஷேர் பண்ணிக்கிட்டார். `ஒருவேளை மனிதகுலம் தன்னோட பயணத்தை மறுபடியும் முதல்ல இருந்து தொடங்குமோ?'னு கேட்பார். ஒவ்வொரு வார்த்தையிலயும் அவரோட அனுபவம் பிரதிபலிச்சதைப் பார்க்க முடிஞ்சது.'' 
கபிலன் வைரமுத்து - விவேகம்
``குடும்பம், நண்பர்கள் எல்லாம் என்ன சொல்றாங்க?"
``அஜித் படத்துல நான் வொர்க்பண்றேன்னு தெரிஞ்சதுல இருந்து, நண்பர்கள்கிட்ட இருந்து அடிக்கடி நிறைய கேள்விகள். சில பேர் கதை கேட்பாங்க, சில பேர் `அஜித் கேரக்டர் என்ன?'னு கேட்பாங்க. எல்லோருக்கும் `முதல் நாள் முதல் ஷோவுல தெரியும்'னு சொல்லிச் சமாளிச்சிருக்கேன். அப்பா, அம்மா, அண்ணன் மூணு பேருக்குமே என் கதை, திரைக்கதையில நம்பிக்கை உண்டு. ஏன்னா, சின்ன வயசுல அவங்க மூணு பேரையும் உட்காரவெச்சு `கட மாஸ்டர்'னு ஒரு கதையைத் திரும்பத் திரும்பச் சொல்லி டார்ச்சர் பண்ணியிருக்கேன். `விவேகம் படத்துல வொர்க்பண்றேன்'னு சொன்னதும், `உன்னோட `கட மாஸ்டர்' கதையைத் தவிர வேற எதை வேணும்னாலும் எழுது'னு சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க. கதை, திரைக்கதையில புதுசா எதையாவது பண்ணணும்கிறதுதான் என் ஆசை. என் முதல் நாவல் `பூமரேங் பூமி' ஆஸ்திரேலியாவின் அபாரஜின் பழங்குடிகள் பற்றிய பதிவு. அவங்களுக்கும் தென்மாவட்டத் தமிழர்களுக்கும் மரபியல்ரீதியான தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்லுது. இதுமாதிரி புதிய களங்களில் இயங்குற கதைகளுக்குத் திரைக்கதை எழுதணும்னு ஆசை!''
`` `கவண்' மாதிரி படம் வந்தாலும், `பிக் பாஸ்' மாதிரி ஷோ வெற்றியடையுதே?''
`` `கவண்' படத்தோட எதிரிகள், `பிக் பாஸ்' நிகழ்ச்சியைவிட வலிமையானவர்கள். தினம் தினம் நம்மைச் சுற்றி நிறைய நாடகங்கள் நடக்குது. இதுல ரசிக்கவேண்டிய நாடகங்கள் எது, புறக்கணிக்கவேண்டிய நாடகங்கள் எதுனு முடிவு எடுக்கிறது சிரமம். இப்படி ரெண்டு வகை இருக்குனு பதிவுசெய்யறது மட்டும்தான் `கவண்' படத்தோட வேலை. அதை நாங்க நல்லவிதமாவே செஞ்சோம்!'' 
கபிலன் வைரமுத்து - விவேகம்
``நீங்க ஆரம்பிச்ச `மக்கள் அணுக்கப் பேரவை' என்னாச்சு?"
``கல்லூரி படிக்கும்போது ஆரம்பிச்ச பேரவை அது. அப்பவே 10,000 பேர் அதுல உறுப்பினரா சேர்ந்தாங்க. சில காரணங்களுக்காக அதைத் தொடர முடியலை. அந்த முயற்சிகளை `இளைஞர்கள் எனும் நாம்' என்ற பெயரில் ஆவணப்படமா உருவாக்கியிருக்கோம். அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும். தமிழ்நாட்டுல இன்னிக்கு மாற்று அரசியலுக்கான தேவை இருக்கு. எங்க கல்லூரிப் பருவத்துல நாங்க அதுக்கான முன்னெடுப்பைத் தொடங்கினோம். அந்த முயற்சி குழந்தைத்தனமா இருந்தாலும், இன்றைய தலைமுறைக்கு அது தேவைனு தோணுச்சு. அதுக்குத்தான் இந்த ஆவணப்படம்.'

'

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com