தஜ்ஜால் தொடர் - பதிவு- 45
இப்னு சய்யாத்- தஜ்ஜால் என்று சந்தேகிக்கப்பட்டவன்.
கடந்த பதிவில், ஒரு முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தோம் அதற்கான பதிலை இப்போது காணலாம்.
தமிமூத்தாரி அவர்கள் சென்றடைந்த தீவில், அவர் கண்ட இளைஞனை,தஜ்ஜால் என்று தூதர் அவர்கள் அங்கீகரித்தார்கள்.அப்படியிருக்க சில ஆண்டுகளுக்கு பின் இப்னு சய்யாத் என்ற சிறுவனை தஜ்ஜால் என்று ஏன் சந்தேகித்தார்?.
இரண்டு சம்பவங்கள் தொடர்பான ஹதிஸ்களுமே ஷஹிஹ் தரத்திலானவை.
ஆகையால் இங்கு தயீப் ஹதிஸ் என்ற பேச்சுக்கு இடமில்லை.
தூதரிடம் இரண்டு வகையான நடவடிக்கைகள் இருந்தால் இரண்டுமே சரியாக தான் இருக்க முடியும் என்று நம்புவதே இஸ்லாத்திற்கு உட்பட்ட சிந்தனையாகும்.
தூதரிடம் தவறு இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை.ஏனெனில் தூதர்கள் இறைவனின் நேரடி தொடர்பில் இருப்பவர்கள்.அவர்கள் தவறு செய்தால் அதை இறைவன் உடனடியாக சுட்டி காட்டுவான்.
நமது இறுதி தூதரும் சில மிகச்சிரிய பிழைகள் செய்ததையும் அதை இறைவன் குர்ஆனில் கண்டிப்பதையும் நாம் பார்க்கிறோம்.
ஆகையால் தூதர் குழம்பியிருக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை.அவ்வாறு எந்த ஒரு முஃமினும் சிந்திக்க மாட்டார்.
இரண்டு ஹதிஸுமே ஷஹிஹ் தரத்தில் அமைந்திருக்கிறது.
அப்படியென்றால் இரண்டுமே சரி தான்.
சரி.நாம் எப்படி இந்த இரண்டு நடவடிக்கைகளையும், இஸ்லாமிய சிந்தனைக்கு உட்பட்டு ஒன்றிணைப்பது?
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இளைஞனை தஜ்ஜால் என்று கூறிவிட்டு பிறகு ஒரு சிறுவனை தஜ்ஜால் என்று சந்தேகிக்கும் நடவடிக்கையை எப்படி ஒருங்கிணைப்பது?.
இங்கு நாம், இறைவன் தன்னுடைய அடியார்களுக்கு செய்தி அறிவிக்கும் முறைகளை பற்றிய அடிப்படைகளை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
1.இறைவன் அவனுடைய தூதர்களுக்கு வஹீ மூலம் செய்தியறிவிப்பான்.இந்த வஹீ என்பது இறைத்தூதர்களுக்கு மட்டுமே உரியது.
2.இறைத்தூதர்களை தவிர்த்து ,சாதாரண மனிதர்களுக்கு, இறைவன் உள்ளுணர்வை ஏற்படுத்துவதன் மூலம் செய்தியறிவிப்பான்.
நபி மூஸா(அலை) அவர்களின் தாயாருக்கு இறைவன் ஏற்படுத்திய உள்ளுணர்வு பற்றி குர்ஆன் கூறுகிறது.
3.அது போன்று சாதாரண மனிதர்களுக்கு கனவுகள் மற்றும் காட்சிகள் மூலமாகவும் செய்தியறிவிப்பான்.
4.சில அரிய நேரங்களில் வானவர்கள் மூலமாகவும் சாதாரண மனிதர்களுக்கு செய்தியறிவிப்பான்.
அன்னை மர்யம் அவர்களின் முன் வானவர் தலைவர் ஜிப்ரீல் தோன்றி, மீட்பரான ஆண் குழந்தை பற்றிய செய்தியறிவித்தது. (இது நமது இறுதி தூதருக்கு முன்பிருந்த காலம் வரை தான்.அவருக்கு பின் இந்த நடைமுறை கிடையாது.)
ஆக தமீமுத்தாரி போன்ற சாதாரண மனிதருக்கு, இறைவன் கனவுகள் மற்றும் காட்சிகள் மூலம் செய்தியறிவிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இதனடிப்படையில் நாம் கீழ்க்கண்ட முடிவுக்கு வரலாம்.
தமீமுத்தாரி அவர்கள் ஒரு தீவை அடைந்தார்கள் என்பது உண்மையான நிகழ்வு.ஆனால் அவர் தஜ்ஜாலை கண்டது என்பது ஒரு நிகழ்வு இல்லை. அது இறைவன், தமிமூத்தாரிக்கு காட்சிகள் மூலம் வழங்கிய செய்தி.(Tameem meeting with Dajjal is not real event. It is a vision. Message through vision.)
அந்த செய்தியின் படி தஜ்ஜால் உடல் பருமனான ஒரு இளைஞன்.
இறைத்தூதரும் தஜ்ஜாலை பற்றி குறிப்பிடுகையில் அவன் முடிகள் சுருண்ட உடல் பருமனான ஒரு இளைஞன் என்றே அறிவித்திருக்கிறார்கள்.
இறைவன் தமீமுக்கு வழங்கிய செய்தியின்(காட்சியின்) படி தஜ்ஜால் அந்த தீவிலிருந்து தன் பணியை தொடங்குவான்.
ஆக தமிமூக்கு,இறைவனால் வழங்கப்பட்ட காட்சி என்பது எதிர்காலத்துடன் தொடர்புடையது.
ஆக தஜ்ஜாலை நமது தூதர் இளைஞன் என்று அங்கீகரித்ததும், எதிர்காலத்துடன் தொடர்புடையது.
இப்னு சய்யாத் என்ற சிறுவனை சந்தேகித்தது நிகழ் காலத்துடன் தொடர்புடையது.
ஆக தூதரின் இரண்டு நடவடிக்கைகளும் சரியானது தான்.
இப்னு சய்யாத்தை தூதர் சந்தேகித்ததுடன் நின்றுவிடவில்லை.அவனை கண்காணிக்கவும் செய்தார்கள்.
ஒரு முறை இப்னு சய்யாத் தன்னுடைய படுக்கையில் படுத்தவாறே ஏதோ முணங்கி கொண்டிருந்தான்.
அதை செவி மடுக்க நமது தூதர் அவர்கள் அவனறியாதவாறு மறைந்து நின்றார்கள்.ஆனால் தூதரை,இப்னு சய்யாத்தின் தாயார் கண்டுவிட்டு,இப்னு சய்யாத்திடம்,சப் அங்கு முகம்மது இருக்கிறார் என்று கூறி அவனை விழிக்கச்செய்தாள்.
அவன் தாய் என்னை காணாமல் இருந்திருந்தால் சில தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கும் என்று தமது தோழர்களிடம் தூதர் கூறினார்கள்.
அன்றைய அராபிய முஸ்லிம் மக்கள், தஜ்ஜால் இந்த பூமியில் நாற்பது நாட்கள் வாழ்வான் என்ற ஹதிஸிற்கு சரியான விளக்கம் அறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் இப்னு சய்யாத்தின் மேல் கொண்ட சந்தேகம் கூட சான்றளிக்கிறது.
இப்னு சய்யாத்தை சிறுவனாக இருந்தபோது சந்தேகிக்க தொடங்கிய மக்கள், அவன் இளைஞனாக இருந்த காலம் வரையிலும் சந்தேகித்துள்ளனர்.
இது எதை தெளிவாக காட்டுகிறது என்றால் 40 நாட்கள் என்பது ஒரு நீளமான கால அளவை குறிப்பதற்கான அராபிய சொல் நடைமுறை ஆகும் என்பதை தான்.
இப்னு சய்யாத்தை பற்றிய நபித்தோழர்களின் கருத்து எவ்வாறு இருந்தது என்பதை பற்றி நாளை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்.........
தஜ்ஜால் தொடர் -பதிவு- 44; இப்னு சய்யாத் - தஜ்ஜால் என்று சந்தேகிக்கப்பட்டவன். கடந்த பதிவில் இப்னு சய்யாத்தை மக்கள் ஏன் தஜ்ஜால் என்று சந்தேகித்தனர் என்பதை பார்த்தோம்.இன்று இப்னு சய்யாத்துடனான தூதரின் சந்திப்பை காண்போம்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/12/44.html?spref=tw
Post a Comment