தஜ்ஜால் தொடர் பதிவு- 47
தஜ்ஜாலை குறிப்பிடும் குர்ஆன் வசனம்:
நேற்று பதிவை நிறைவு செய்யும் போது, இன்று நபி ஈஸா(அலை) அவர்களின் வருகையையும் தஜ்ஜாலின் முடிவையும் காணலாம் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதற்கு முன்பாக தஜ்ஜாலை குறிப்பிடும் குர்ஆன் வசனத்தை பற்றி இன்று காணலாம்.
பொதுவாக தஜ்ஜாலை பற்றி வரக்கூடிய செய்திகள் அனைத்தும் ஹதிஸ்களிலிருந்து வருவது மட்டுமே.
குர்ஆனில் அவனை பற்றிய செய்திகள் பெரிய அளவில் இல்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் சில மார்க்க அறிஞர்கள், குர்ஆனில் தஜ்ஜாலை பற்றி எங்குமே குறிப்பிடப்படவில்லை என்று கூறுகிறார்கள்.
மிக சில அறிஞர்கள் மட்டுமே குர்ஆனில் தஜ்ஜாலை பற்றிய குறிப்புகள் உள்ளதாக கூறிகின்றனர்.
அதில் மிக முக்கியமானவர் டிரினிடாட் என்ற கரீபியன் நாட்டை சேர்ந்த அறிஞர், ஷேக் இம்ரான் நாசர் ஹுசைன் ஆவார்.
நம்முடைய இந்த தஜ்ஜால் தொடரின் அடிப்படை கருத்துகள் அனைத்தும் இவரின் சொற்பொழிவிலிருந்து பெறப்பட்டவையாகும்.மேலதிக தேடல்கள் மற்றும் ஆய்வுகள் மட்டுமே எனது பங்காகும்.
இறைவன் இம்ரான் ஹுசைன் அவர்களுக்கு அருள் புரியட்டுமாக.
குர்ஆனில் இரண்டு வகையான வசனங்கள் இருப்பதாக இறைவன் சூரத்துல் ஆலு இம்ரானில் கூறுகின்றான்.
1.முகாமத்(மிக தெளிவான வெளிப்படையான வசனங்கள்)
2.முத்தஷாபிஹாத்(குறிப்பு வசனங்கள்)
இதில் முகாமத் என்ற வசனங்களே குர்ஆனின் தாயாகும்.இது மிகவும். வெளிப்படையானது யாரும் யாருக்கும் விளக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் முத்தஷாபிஹாத் வசனங்கள் விளக்கப்பட வேண்டும்.இதற்கு தப்ஸிர் மட்டும் போதாது.தக்வீலும் தேவை.
இருப்பினும் முத்தஷாபிஹாத் வசனத்திற்கு யார் விளக்கம் அளித்தாலும் விளக்கத்தின் முடிவில் அல்லாவே அறிந்தவன் என்று முடிக்க வேண்டும.
ஏனெனில் நம்முடைய விளக்கம் சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம்.எனவே முத்தஷாபிஹாத் வசனத்திற்கு விளக்கம் அளித்து முடிக்கும் போது அல்லாவே அறிந்தவன் என்று கூற வேண்டும்.
இப்போது நாம் தஜ்ஜாலை குறிப்பிடும் வசனத்தை பார்க்கலாம்.
குர்ஆன்38:34-35
இன்னும் நாம் ஸுலைமானைத் திட்டமாகச் சோதித்தோம்; அவருடைய அரியணையில் ஒரு முண்டத்தை எறிந்தோம் - ஆகவே அவர் (நம்மளவில்) திரும்பினார்
"என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பொருங் கொடையாளியாவாய்" எனக் கூறினார்.
இந்த வசனத்திற்கு சில அறிஞர்கள், நபி சுலைமான் (அலை) அவர்கள் ஒரு தவறு செய்ததாகவும் அதற்காக இறைவன் அவரை கடுமையான நோயைக் கொண்டு தண்டித்ததாகவும், அவர் அவருடைய அரியணையில் ஒரு பிணம் போல்(பிண்டம் போல்) இருந்ததாகவும் அதன்பின் இறைவனிடம் மன்னிப்பை கோரினார் என்றும் மேலும் மன்னிப்புடன், அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி யாருக்கும் அளிக்காத ஒரு சிறப்புமிக்க அரசாங்கத்தை இறைவனிடம் கோரியதாகவும் விளக்கம் அளிக்கின்றனர்.
இந்த விளக்கம் சரியா?தவறா?நமக்கு தெரியாது.அல்லாவே அறிந்தவன்.
ஆனால் நமக்கு மாற்று விளக்கம் அளிக்க உரிமை உண்டு.
மார்க்க அறிஞர் இம்ரான் ஹுசைன் அவர்கள் கீழ்க்கண்டவாறு இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கிறார்.
நபி சுலைமான்(அலை) அவர்களின் அரியணையில் இறைவன் ஒரு பிண்டத்தை எறிந்தான்.அதாவது நபி சுலைமான் அவர்களுக்கு இறைவன் ஒரு காட்சியின் மூலம் செய்தி அறிவிக்கிறான்.அதாவது நபி சுலைமான்(அலை) அவர்கள் தன்னுடைய அரியணையில் ஒரு பிண்டத்தை காண்கிறார்.அந்த பிண்டத்தை, தீய சக்தி என்று புரிந்துக்கொள்கிறார்.
அந்த தீய சக்தி, தன்னுடைய அரியணையை(ஆட்சியை) அதாவது ஜெருசலத்தை தலைநகரமாக கொண்ட உலக வல்லரசின் ஆட்சியை, அந்த தீய சக்தி கைப்பற்ற விரும்புவதை புரிந்துக் கொண்டு இறைவனிடம் திரும்பினார்(பிரார்த்தித்தார்).
இறைவா என்னை மன்னிப்பாயாக(இறைவனிடம் எதை பிரார்த்திப்பதற்கு முன்னரும் மன்னிப்பை தேடுவது சிறந்த நடைமுறையாகும்)
யாருக்கும் வழங்கிடாத ஆட்சியை எனக்கு வழங்குவாயாக(அதாவது எனக்கு நீ வழங்கிய அதீத ஆற்றலும் செல்வமும் கொண்ட இந்த அரசை எனக்கு பின்பு யாருக்கும் வழங்காதிருப்பாயாக என்று பிரார்தித்தார்.)
இறைவனும் அவர் பிரார்த்தனையை ஏற்றார்.அவரின் மறைவிற்கு பின் ஜெருசலம் வீழ்ந்தது.
நபி சுலைமான்(அலை) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்தற்கு காரணம் அந்த தீய சக்தி(பிண்டம்),தன் ஆட்சியை கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்கு தான்.
இந்த தீய சக்தியான பிண்டம் எது?
பதில்:தஜ்ஜால்.
ஏன் தஜ்ஜாலை குர்ஆன் பிண்டம்(ஜஸ்ஸாத்) என்று கூறுகிறது?.
இயற்கையாக ஒரு சாதாரண மனிதன் நன்மை செய்யலாம்,தீமை செய்யலாம்,திருந்தலாம்,இறைவனிடம் மன்னிப்பு தேடலாம்.இது அந்த மனிதனின் சுயம்(நப்ஸ்) சார்ந்தது.
ஆனால் தஜ்ஜால் தவ்பா செய்வது என்பது நடக்காது.அவன் வடிவமைக்கப்பட்டதே தீய சோதனைகளுக்காகவே.அவனுக்கு நப்ஸ் கிடையாது.அவன் ஜஸ்ஸாத்(பிண்டம்).
ஆக நபி சுலைமான் அவர்களின் அரியணையில் வீசப்பட்ட பிண்டம் தஜ்ஜால் ஆவான்.
இது தான் இவ்வசனத்திற்கு இம்ரான் அவர்கள் தரும் விளக்கமாகும்.
விளக்கம் சரியா?தவறா?அல்லாவே அறிந்தவன்.
நபி சுலைமான்(அலை) அவர்களை துஆவை இறைவன் ஏற்றுக் கொண்டதால் அந்த அளவிற்கு சிறப்பான ஆட்சி இனி யாருக்கும் கிடைக்கப்போவதில்லை.
தஜ்ஜால் ஜெருசலத்தை கைப்பற்றினாலும்,அதை உலக வல்லரசாக மாற்றினாலும்,நபி சுலைமான்(அலை) அவர்களின் காலத்திய சிறப்பான,வலுவானஅரசாக அதை உருவாக்க முடியாது.
இன்னும் சொல்லப்போனால் பொற்கால ஆட்சியை மீண்டும் கொண்டு வரவுள்ள மீட்பர்(Messiah) நபி ஈஸா(அலை) அவர்கள், ஜெருசலத்தில் அமைக்க உள்ள நல்லரசுக்கூட நபி சுலைமான்(அலை)அவர்களுடைய ஆட்சிக்கு நிகராக இருக்காது.
இது நபி சுலைமான்(அலை) அவர்களுக்கு இறைவன் அளித்த சிறப்பாகும்.
மீட்பரின் வருகையும் தஜ்ஜாலின் முடிவும் பற்றி நாளை காணலாம்...
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்......
தஜ்ஜால் தொடர் - பதிவு- 46; இப்னு சய்யாத்- தஜ்ஜால் என்று சந்தேகிக்கப்பட்டவன். இப்னு சய்யாத் தூதர் வாழ்ந்த காலம் வரையிலும் யூதனாகவே தொடர்ந்தான். உமர்(ரலி) அவர்கள் ஒரு முறை தூதரின் சபையில் இருந்த போது இப்னு சய்யாத் தான் தஜ்ஜால் என்று சத்தியமிட்டு கூறினார்கள்:- https://e-funandjoyindia.blogspot.com/2021/01/46.html?spref=tw
Post a Comment