இந்த வருடம் (1990) அமெரிக்கா சென்று, அவர்களுடன் நெருங்கி பழகி, அவர்களின் சினிமா தொழில் நுட்பத்தை சற்றே தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த பொழுது ,நான் என்னை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.
நான் என்ன செய்து விட்டேன் ,நாடு முன்னேற? சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதில் என் பங்கு என்ன இருக்கிறது?
கூவத்தின் நாற்றம் என் மூக்கை துளைப்பதை மட்டும் தான் குறையாய் சொல்லி கொண்டிருக்கும் வேளையில் , எனது வீட்டு சாக்கடை கலப்பதும் கூவம் தானே, என்று யோசிக்க மறந்தது ஏன்?
எனது நறகலும் கலந்து வரும் மணம் தானே அந்த கூவத்தின் மணம் என்பதை யோசித்து பார்த்தேன். அரசியல் வாதி அள்ளிக் கொண்டு போன பணத்தை சுவிஸ் வங்கியில் வைத்திருக்கிறான் என்று கோபமாய் கூக்குரல் செய்யும் எதிர்கட்சி தலைவர்களுடன் நானும் சேர்ந்து கூக்குரல் இடலாம். ஆனால் அந்த பணத்தில் என்னுடைய ஒரு பைசாவும் இருக்கிறது. அவனுக்கு கொடுக்கபட்டுள்ள லஞ்சத்தில் எங்கோ என்னுடைய ஒரு பைசாவும் கலந்திருக்கிறதே என்று நான் யோசித்து பார்க்கையில். ..... இத்தனை வீழ்ச்சியின் காரணத்தில் எனக்கும் ஒரு கணிசமான பங்கிருக்கிறது என்பதை உணர்ந்து வாய்பேச்சு அடங்கி போகிறது.
சற்றே குற்றவுணர்வு என்னை தாக்கி என் தொழிலில் என்ன செய்தேன் என்று என்னையே நான் விமர்சித்து பார்த்து கொள்ளும் ஒரு நிலைக்கு என்னை ஆளாக்குகிறது.
அப்படி விமர்சித்து பார்த்த பொழுது "செய்ததெல்லாம் போதாது " என்று சபையடக்கமான சொல்லை விட ,அதிகமான சில விஷயங்கள் புரிகிறது- வலிக்கிறது.
அப்பு செய்தீர்களே , நாயகன் செய்தீர்களே. .....
"மூன்றாம் பிறை" செய்யவில்லையா? இரண்டு முறை ஜனாதிபதி விருது வாங்க வில்லையா? என்றெல்லாம் என்னுடைய நண்பர்களும் ரசிகர்களும் ,என்னுடைய சோர்விலிருந்து ஆசுவாசப்படுத்த சொல்லுவார்கள்.
ஆனால் யோசித்து பார்த்தால் , - இந்தியா.... இந்தியா முதுகை தட்டி கொள்ள கூடாது.
கமல்ஹாசன் , கமல்ஹாசன் முதுகை தட்டி கொள்வது போதாது.
நாம் உலகத்துடன் தொடர்பு கொள்ளும் நாடாக வேண்டும். எனது சினிமா உலகத்திற்கும் புரிய வேண்டும். எனது குரல் உலகத்திற்கு கேட்க வேண்டும்.
அப்படி செய்ய முடியுமாயின்,
அமெரிக்காவைவிட .... ஜெர்மனியை விட, அகலமான பாதைகள் நாம் செய்ய முடியும்.
இதற்கு நானென்ன செய்ய முடியும்? என்று ஒரு ரிக் க்ஷா தொழிலாளி கேட்பானாயின் , - செய்ய முடியும்.
கமல்ஹாசன் தனது தொழிலை உலக ரீதியில் பரப்ப முடியுமாயின் , ரிக்ஷாக்காரரும் தனது ரிக்ஷா தொழிலை உலக ரீதியாக்க முடியும்.
உலகத்து டூரிஸ்ட் மேப்பில் ,அழகான ரிக்ஷாக்கள் இந்தியாவில் தான் உள்ளது என்று சொல்ல வைக்க முடியும்.
நாணயமான ரிக்ஷாக்காரர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியும்.
"வேர்கடலை விற்கிறேன்" நானென்ன செய்ய முடியும்? என்று கேட்டால்...... முதலில் வேர்க்கடலை தோலை அள்ளி குப்பையில் போடு . உன் நாட்டை அழகாக்கி விட்டாய்.
இந்த அளவில் ஒவ்வொருவரும் செய்ய முடியும் என்பதை உணர்கிறேன்.
நான் உபதேசம் செய்வது உனக்கல்ல - எனக்கே.
இதை நான் பேசி பார்த்து கொள்வதின் மூலம் - இதை நான் எழுதி பார்த்து கொள்வதின் மூலம் உண்மைகள் எனக்கு இன்னும் தெளிவாய் புரிகிறது. அவ்வளவே!
இதை நான் உனக்கு எழுதினேன் என்பதை விட, எனக்கு நானே எழுதி கொண்ட கடிதம்.
- கலைஞானி கமல்ஹாசன் (மய்யம் இதழின் தலையங்கம் ஜனவரி1990 ) .
Post a Comment