ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா ஜோடியாக நடித்து திரைக்கு வந்த ‘திரிஷ்யம்’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது.
இந்த படம் தமிழில் கமல்ஹாசன்-கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார்.
அவரது மூத்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பெண் போலீஸ் அதிகாரியின் மகனை மகளும், மனைவியும் சேர்ந்து அடித்து கொல்கிறார்கள். பிணத்தையும் கொலை செய்ததற்கான ஆதாரங்களையும் கமல்ஹாசன் மறைத்து இருவரையும் போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்றுகிறார். புதிதாக கட்டப்பட்டு உள்ள போலீஸ் நிலையத்தின் அடியில் பிணத்தை கமல்ஹாசன் புதைத்து இருப்பதுபோல் படம் முடிகிறது.
பாபநாசம் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுபோல் தெலுங்கு, இந்தி, கன்னடம், சிங்கள மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்தியில் அஜய்தேவ்கானும், தெலுங்கில் வெங்கடேசும், கன்னடத்தில் ரவிசந்திரனும் நடித்து இருந்தனர்.
தற்போது இந்த படம் சீன மொழியிலும் ‘எ ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்டு‘ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. யாங் சியோ, சுஹோ டன், ஜோன் சென் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. படம் வருகிற 20-ந்தேதி திரைக்கு வருகிறது.
Post a Comment