HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 30 October 2020

தஜ்ஜால் தொடர் -பதிவு-19, தஜ்ஜாலின் பித்னாக்கள்; தஜ்ஜாலும் நவீன மகளிரும்; பெண்கள் தான் ஆண்களை விட தஜ்ஜால் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்:-

 தஜ்ஜால் தொடர் -பதிவு-19

தஜ்ஜாலின் பித்னாக்கள்
தஜ்ஜாலும் நவீன மகளிரும்.
தஜ்ஜாலை மிக அதிக அளவில் யூதர்களும்,யூதர்களுக்கு அடுத்தப்படியாக பெண்களும் அதிக அளவில் பின் தொடர்வார்கள் என்பது ஹதிஸ்.
ஆகவே பெண்கள் தான் ஆண்களை விட தஜ்ஜால் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
தஜ்ஜால் பல யுக்திகளை பயன்படுத்தி பெண்கள் மத்தியில் பித்னாக்களை பரவச்செய்திருந்தாலும் தற்போது அவன் எடுத்திருக்கும் ஆயுதம் மிகவும் மோசமானது.
ஆம்,எந்த மார்க்கம் பெண்களின் உரிமைகளையும்,விடுதலையையும்,நீதியையும் 1500 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்ததோ அந்த மார்க்கத்தை ,நேர்வழி காட்டும் இஸ்லாமிய மார்க்கத்தை, பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற பொய்யை , மாயையை Main stream media க்கள் மூலம் உருவாக்கி அதை பரப்புதல் என்ற அயோக்கியதனமான சிந்தனையை(ஆயுதத்தை) தஜ்ஜால் கையிலெடுத்திருக்கிறான்.
இந்த ஆயுதத்தை எதிர்கொள்ள ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும், இஸ்லாம் வழங்கிய பெண்ணுரிமைகளை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பெண்ணுரிமை என்ற முழக்கத்தை நவீன உலகம் 20 ஆம் நூற்றாண்டில் தான் முதன் முதலாக முழங்கியது ஆனால் இஸ்லாம் இந்த முழக்கங்களை 1500 ஆண்டுகளுக்கு முன்பே சட்டமாக்கியது என்பது இஸ்லாத்தின் எத்தனையோ பல சிறப்புகளில் இதுவும் ஒன்று.
உலகமே பெண் குழந்தைகளை ஏதோ பூச்சிகளை கொல்வது போல் கொலை செய்துக் கொண்டிருந்த காலத்தில் இந்த காட்டுமிராண்டித்தனத்தை தடை செய்த மார்க்கம் இஸ்லாம்.மேலும் பெண் குழந்தைகளை உரிய முறையில் பராமரித்து அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் பெற்றொர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று நற்செய்தி கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.
கணவன் இழந்த பெண்களை உடன்கட்டை ஏற்றும் கொடிய நிகழ்ச்சிகள் அரங்கேறிய காலத்தில்,கணவன் இழந்த பெண்களுக்கு மறுமணத்தை தடை செய்து அவர்களை மிக தவறான பயன்படுத்தலுக்கு உட்படுத்திய காலத்தில் பெண்களுக்கான மறுமணத்தை மிகவும் எளிமையான ஒன்றாக மாற்றியது இஸ்லாம் தான்.
விவாகரத்து சட்டங்களிலும் பெண்களுக்கு தான் முழு சலுகை வழங்கியிருக்கிறது இஸ்லாம்.
கணவன் தலாக் கேட்டால் பலக்கட்ட விசரணைகள்,பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு தான் தலாக்.
மனைவி கணவனிடமிருந்து பிரிவதற்கு குலா கேட்டால் எந்த விசாரணையும் இல்லை பேச்சுவார்த்தையும் இல்லை உடனே குலா வழங்கப்படும்.
உலகம் முழுவதும் வரதட்சணை பெறும் காலத்தில், பெண்களுக்கு மணக்கொடைகளை வழங்கி திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டளையை விதித்த ஒரே மார்க்கம் இஸ்லாம்.
ஒரு மனிதன் மிக அதிகமாக கடமைப்பட்டுள்ள மற்ற நபர்கள் யார் என்ற கேள்விக்கு முதல் மூன்று இடங்களை தாய்க்கு வழங்கி நான்காவது இடத்தை தந்தைக்கு வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாம்.
மகள்,சகோதரி,மனைவி,தாய் என்ற அனைத்து படிநிலைகளிலும் பெண்களின் உரிமையை நிலைநாட்டி அவர்களுக்கு நீதி வழங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.
இஸ்லாம் எவ்வாறு பெண்களுக்கு உரிமைகளை வழங்கியிருக்கிறதோ அதே போல சில கடமைகளையும் வரையறைகளையும் வகுத்துள்ளது.
இந்த வரையரைகளில் தான் தஜ்ஜால் தன் விளையாட்டை புகுத்தி பெண்களை அவனுடைய பித்னாக்கள் பக்கம் இழுத்து செல்கிறான்.
இறைவனும்,இறைத்தூதரும் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அதில் மாற்றுக்கருத்துக்கொள்ள எந்த முஃமினுக்கும் உரிமை இல்லை என்ற அடிப்படையை, நம்பிக்கையை, ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் மனதில் பதிந்துக் கொண்டால் தஜ்ஜாலின் பித்னாக்களிலிருந்து எளிதில் தப்பி விடலாம்.
தஜ்ஜாலின் பித்னாக்களும் மகளிர் உலகமும்.
ஆணும் பெண்ணும் சரி சமம் என்ற முழக்கம்
இறைவன் தன் திருமறையில் வசனம் 2:228 மற்றும் 4:34 ஆகியவற்றில் பெண்களை விட ஆண்கள் ஒரு படி உயர்வானவர்கள் என்று குறிப்பிடுவதுடன் பெண்களின் மீதான நிர்வாகத்தினை ஆண்களிடம் வழங்குகிறான்.
ஒவ்வொரு பொருளையும் நுட்பமாய் படைத்து அதனை முழுமையாய் அறிந்து அதன் மீது ஆற்றல் செலுத்தும் இறைவன் தன்னுடைய இரண்டு படைப்புகளில் (ஆண் மற்றும் பெண்) ஒன்றை விட ஒன்று ஒரு படி உயர்வானது என்று அறிவிக்கிறான் என்றால் அவனுடைய அறிவிப்பை இறை நம்பிக்கை கொண்ட அனைத்து ஆண்களும் பெண்களும் துளி அளவும் மாற்றுக்கருத்துக் கொள்ளாமல் ஏற்க வேண்டும்.ஏனெனில் படைத்தவன் பிழைகளுக்கோ,
நிர்பந்தங்களுக்கோ அப்பாற்பட்டவன்.
மேலும் நாம் ஹதிஸ்களை ஆராயும் போது ,பெண்கள் ஜமாத்களுக்கோ,கிலாபத்களுக்கோ,ஏனைய பொது அமைப்புகளுக்கோ தலைமை ஏற்கக் கூடாது என்ற இறை கட்டளையை நாம் அறியலாம்.
பெண்ணை விட ஆண்கள் ஒரு படி உயர்ந்தவர்கள் என்று நிர்ணயித்து, தலைமை மற்றும் நிர்வாக பொறுப்பினை ஆண்களிடம் இறைவன் ஒப்படைத்துவிட்டான்.
ஆனால் தஜ்ஜால் தன் அடியாட்கள் மூலம் ஏற்படுத்தியுள்ள அமைப்புகளைக்கொண்டு ஆணும் பெண்ணும் சரி சமம் என்ற கருத்தியலை பரப்பி பெண்களிடம் பொது அமைப்பின் தலைமையையும் நிர்வாகத்தினையும் ஒப்படைத்திருக்கிறான்.
இன்று பெண்கள் MLA,MPகளாகவும்,முதலமைச்சர்களாகவும்,பிரதமர்களாகவும் உலகில் வலம் வருவது என்பது தஜ்ஜாலின் ஏற்பாடாகும்.
இறைவன் ஆண் பெண் படைப்பை பற்றி பேசும் போது பகல் மற்றும் இரவின் படைப்புடன் ஒப்பிடுகிறான். அதாவது சமூகத்தில் ஆண்களுக்கு ஒரு பணியையும் பெண்களுக்கு ஒரு பணியையும் இறைவன் ஒப்படைத்திருக்கிறான்.
ஆனால் இன்றைய தினம் ஆணகளும் பெண்களும் தங்களின் பணியை அறியாமல் தங்களுக்கு தொடர்பில்லாத பணிகளில் ஈடுபடுகின்றனர்.
ஆண்கள் பெண்களை போலவும் பெண்கள் ஆண்களை போலவும் உடையணிவது யுக முடிவு நாளின் சிறிய அடையாளங்களில் ஒன்றாகும் என்பது ஹதிஸ்.
சில மார்க்க அறிஞர்கள் இந்த ஹதிஸை முகாமத் (நேரடி பொருள்) வடிவிலானது என்றும் சிலர் முத்தஸாபிகாத் வடிவிலானது (குறியீட்டு பொருள்) என்றும் கூறுகிறார்கள்.
இந்த ஹதிஸ் இரண்டு வடிவிலும் இன்றைய தினம் உலகில் நடைமுறைக்கு வந்துவிட்டது.
பெண்கள் ஆண்களைப் போல உடை அணிவது போல ஆண்களும் பெண்களை போல (தாடி மற்றும் மீசையை ஒரே நேரத்தில் மழித்து) பெண்களுக்கான உடையணிகின்றனர். தங்களின் இயற்கைக்கு மாறான ஒரு பால் இச்சையை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு.
இது ஹதிஸின் நேரடி பொருளுக்கான இன்றைய உலகம்.
பெண்களின் நிர்வாகிகளாகவும் பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருபவர்களாகவும் ஆண்களை இறைவன் நியமித்திருக்கிறான்.ஆனால் இன்றைய நவீன உலகின் ஆண்கள் (போதையும்,சோம்பலும்,சொகுசும் தலைக்கேறிய ஆண்கள்) தங்கள் பெண்களின் வருவாய் கொண்டு வாழ்பவர்களாக உள்ளனர்.இங்கு பெண்கள், ஆண்களுக்கும் தங்களின் குழந்தைகளுக்கும் தேவையான வசதிகளை வழங்கி நிர்வகிக்கிறாள்.
அது போல் சிலர் பொருள் ஈட்டும் ஆண்களாகவே இருந்தாலும் குடும்பத்தின் தலைமை பொறுப்பையும் நிர்வாகத்தினையும் பெண்களிடம் இழக்கின்றனர்.இங்கு பெண்கள் குடும்பத்தின் தலைமையை ஏற்கின்றனர்.
இன்றைய உலகின் இந்த அவலநிலை, மேற்குறிப்பிட்ட ஹதிஸின் குறியீட்டு பொருளுடன் தொடர்புடையது.
ஆண் பெண்ணை விட ஒரு படி உயர்ந்தவன் என்று கூறி பெண்கள்,குழந்தைகள், பொது அமைப்புகள்,அரசு நிர்வாகம் என்று அனைத்தையும் ஆண்களிடம் இறைவன் ஒப்படைத்திருக்கிறான்.
ஆனால் தஜ்ஜால் ஆணும் பெண்ணும் சரிசமம் என்று கூறி ஆண்களின் பொறுப்பை பெண்களிடமும் பெண்களின் பொறுப்பை ஆண்களிடமும் ஒப்படைத்துவிட்டான்.
ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும் இறை அறிவிப்புகளுக்கு கட்டுப்பட்டு இஸ்லாமிய பெண்களாக தொடரப்போகின்றனரா? இல்லை தஜ்ஜாலின் போலியான புதுமை பெண்கள் கோஷத்தில் மதி மயங்கி தஜ்ஜாலுக்கு இரையாக போகின்றனரா?என்பதை தீர்மானிக்கும் அளவுகோல் உள்ளத்தில் இருக்கும் ஈமான் மட்டுமே.
இன்றைய பெண்களின் உள்ளத்தில் இறைவன் உறுதியான ஈமான் உண்டாக்கட்டுமாக....
தஜ்ஜாலின் பொருளியல் பித்னாக்களையும்,
தஜ்ஜால் பொருளியல் துறையில் ஏற்படுத்தியுள்ள சர்வ நாசங்களின் அடிப்படையான காகித பணத்தையும் பற்றி வரும் தொடர்களில் காணலாம்....
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்......


தஜ்ஜால் தொடர் -பதிவு-18, தஜ்ஜாலின் பித்னாக்கள் மகளிர் உலகில் பரப்பும் குழப்பவாதங்கள்.:-https://e-funandjoyindia.blogspot.com/2020/10/18.html?spref=tw




About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com