தஜ்ஜால் தொடர்- பதிவு 8
தஜ்ஜாலின் அடியாட்கள் - யஃஜூஜ் மஃஜூஜ்
தஜ்ஜாலை போலவே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டமும் யுக முடிவு நாளின் பெரிய பத்து அடையாங்களில் ஒன்றாகும்.இருந்த போதிலும் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரை பற்றி தனியே விளக்கினால் பல விஷயங்கள் விடுபட்டு போகும்.தஜ்ஜாலுடன் இணைத்து விளக்கினால் தான் சரியாக விளக்க முடியும்.ஏனெனில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் தஜ்ஜாலின் அடியாட்கள் ஆவார்கள்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் எப்படி தஜ்ஜாலின் அடியாட்கள் என்பதை தொடர்-3ல்விரிவாக விளக்கப்பட்டிருந்தது.
முதலில் யார் இந்த யஃஜூஜ் மஃஜூஜ்?என்பதை பார்ப்போம்.
இறைவன் படைப்பில் மூன்று சிந்திக்கக்கூடிய படைப்புகள் உள்ளன.
1.வானவர்கள்
2.ஜின்கள்
3.இன்ஷான்(மனிதன்)
இந்த மூவரில் வானவர்களுக்கு சுய விருப்பம் என்பது கிடையாது அவர்கள் இறைவன் கட்டளையிடுவதை செய்து முடிப்பவர்கள்.ஆகவே அவர்கள் தீச்செயலில் ஈடுபட வாய்ப்பே கிடையாது.
இறைவன் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் பற்றி விளக்கும் போது அவர்கள் பூமியில் குழப்பத்தையும் கேட்டையும் ஏற்படுத்தியவர்கள் என்று விவரிக்கிறான்.
எனவே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வானவர்கள் கூட்டம் அல்ல.அப்படியென்றால் அவர்கள் ஜின்களாகவோ மனிதர்களாகவோ தான் இருக்க முடியும்.
ஜின்களை பற்றி இறைவன் குர்ஆனில் விளக்கும் போது அவர்கள் முதல் வானத்தின் எல்லை வரைக்கும் செல்லக்கூடியவர்கள் என்று விவரிக்கிறான்.மேலும் நபி சுலைமான் (அலை) அவர்களிடமிருந்த அடிமை ஜின்(இப்ரீத் என்ற ஜின்) கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரி நாட்டு அரசியுடைய சிம்மாசனத்தை நபி சுலைமான் அவர்களின் சபைக்கு கொண்டு வந்த வரலாற்றையும் நாம் குர்ஆனில் காண்கிறோம்.எனவே இவர்களை (ஜின்களை)ஒரு அணை கட்டியோ,சுவர் எழுப்பியோ ஒரு இடத்தில் அடைக்க முடியாது.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை மன்னர் துல்கர்னைன் இரு மலைகளுக்கிடையே அணை கட்டி சிறைப்பிடித்ததை நாம் குர்ஆனில் காண்கிறோம்.
எனவே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் மனிதக்கூட்டம் தான் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இந்த கூட்டம் யாருடைய சந்ததிகள் என்பது பற்றி குர்ஆனில் ஏதும் இல்லை.
பைபிளில் இவர்கள் நபி நூஹ்(அலை)(Prophet Noah) அவர்களின் மூத்த மகன் ஜேபடைட் என்பவரின் சந்ததிகள் என்று கூறப்பட்டுள்ளது.
இவர்களுடைய அங்க அடையாளங்கள்:
இவர்கள் ஒரு அடி அல்லது இரண்டு அடி உடைய சித்திரக் குள்ளர்கள் என்ற தவறான நம்பிக்கை இன்று நம் சமூகத்தில் மேலோங்கி உள்ளது ஆனால் அவர்கள் குள்ளமானவர்கள் என்பதற்கு ஆதாரபூர்வமான ஹதிஸ்கள் இல்லை.
இவர்களை பற்றி நமக்கு ஹதிஸில் கிடைக்கும் ஒரே அடையாளம் இவர்கள் கேடயம் போன்ற அகன்ற முகத்தையும் குட்டியான கண்களை கொண்டவர்கள் என்பது மட்டுமே.
இவர்கள் ஒவ்வொருவரும் நூறு பேரை பெற்றெடுப்பார்கள் என்ற ஹதிஸ் உள்ளது இதற்கு நேரடி பொருள் கொள்ளுதல் என்பது தவறான ஒன்றாகும்.இது குறியீட்டு வகையை சார்ந்ததாகும் (religious symbolism).இதன் பொருள் இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது நூறு பேரையாவது இவர்களை போலவே மாற்றி வழி கெடுப்பார்கள் என்பது தான் சரியான விளக்கமாகும்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் ஜின் கூட்டம் என்று மிக சிலர் கூறுகிறார்கள் ஆனால் அது தவறு என்று மேலே விளக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மனிதர்கள் என்பதால் பூமியின் அடி ஆழத்தில் வாழ முடியாது.அது போல காற்று மற்றும் சூரிய ஒளி புக முடியாத பலம் வாய்ந்த இரும்பு அறைகளுக்கும் வாழ முடியாது என்பதையும் மிக எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
எனவே மன்னர் துல்கர்னைன் ஏற்படுத்திய தடுப்பு என்பது மிகவும் உயரமான பலம் வாய்ந்த தடுப்பு சுவர் தான் என்பதையும் புரியலாம்.அதாவது தடுப்பு சுவர் என்பது யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் அவர்களுடைய வாழிடத்திலிருந்து(நாட்டிலிருந்து) வெளி உலகை தொடர்பு கொள்ளாமலிருப்பதற்கான ஏற்பாடு தான் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் மிக அதிகமான கேடுகளை செய்து வந்த நிலையில் அவர்களால் பாதிக்கப்பட்ட கூட்டம் மன்னர் துல்கர்னைன் அவர்களிடம் புகாரளித்தது.
யார் இந்த மன்னர் துல்கர்னைன்?
மன்னர் துல்கர்னைன் அவர்கள் வரலாற்றின் பக்கங்களில், சைரஸ் என்று அறியப்படுகிறார்.பைபிளிலும் சைரஸ் என்றே அறியப்படுகிறார்.
இந்த சைரஸ் அவர்கள் பெர்சியாவின் மன்னர். இவர் அந்த காலத்தில் மாபெரும் வல்லரசுகளாக விளங்கிய மீடியா மற்றும் பாபிலோனியா ஆகிய இரண்டு அரசுகளையும் வீழ்த்தி அக்கமேனைட் என்னும் பேரரசை உருவாக்கினார்.
துல்கர்னைன் என்ற பெயருக்கு இரண்டு கொம்புகளை உடையவர் என்று பொருள்.( இரண்டு கொம்புகள் என்பது இரண்டு பேரரசுகளை குறிக்கலாம் - மீடியா மற்றும் பாபிலோனியா ஆகிய இரண்டு அரசுகளை வென்றதை குறிக்கலாம்).
இந்த மன்னரை பற்றி இறைவன் குறிப்பிடும் போது அவரை சிறந்த நல்லடியார் என்று குறிப்பிடுவதுடன் அவருக்கு பூமியில் ஆட்சி அதிகாரத்தை வழங்கியதையும் அதைக் கொண்டு அவர் பூமியில் நல்லதை பரப்பியதையும் தீமையை அழித்ததையும் குறிப்பிடுகிறான்.
தீமையை அழிப்பது துல்கர்னைன் அவர்களின் குணம்.தீமையை செய்வது யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் குணம்.
பல பேரரசுகளை எளிதாக வீழ்த்திய மன்னர் துல்கர்னைன் அவர்கள் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை அழிக்காமல் ஏன் சிறைப்பிடித்தார்?
ஏனெனில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை பற்றி இறைவன் குறிப்பிடுவது என்னவெனில் அவர்களை இறைவனை தவிர்த்து வேறு யாராலும் அழிக்க முடியாது என்பதாகும்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை தோற்கடிக்கலாம் அல்லது சிறைப்பிடிக்கலாம் ஆனால் இறைவனை தவிர்த்து வேறு யாராலும் முற்றிலுமாக அழிக்க முடியாது.
எனவே தான் மன்னர் துல்கர்னைன் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை சிறைப்பிடித்தார்.
மன்னர் துல்கர்னைன் எந்த இடத்தில் எந்த மலைகளுக்கு இடையில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை சிறைப்பிடித்தார் என்பதை பற்றி நாளைய பதிவில் காணலாம்.
யஃஜூஜ் மஃஜூஜ்(KHAZAR WARRIORS) தோராயமான வரலாற்று வரைபடம். நாம் நினைப்பது போல இவர்கள் விசித்திரமான குள்ளர்கள் கிடையாது.
தஜ்ஜால் தொடர்- பதிவு- 7 தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம் தஜ்ஜால் அடைக்கப்பட்டு இருந்த தீவு - பிரிட்டிஷ் இங்கிலாந்து (GREAT BRITAIN) :-https://e-funandjoyindia.blogspot.com/2020/09/7-great-britain.html?spref=tw
Post a Comment