தஜ்ஜால் தொடர் - பதிவு- 42
மஹதி என்றால் நேர்வழி காட்டப்பட்டவர் என்று பொருள்.
ஹதிஸ் தொகுப்புகளில், காலத்தில் முந்திய தொகுப்புகளான புகாரியிலோ,முஸ்லிமிலோ, மஹதி என்ற சொல் இடம் பெறவில்லை.இமாம் என்ற சொல் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
புகாரி மற்றும் முஸ்லிம் நூல்களில் இறுதி நாட்களில், இமாம் ஒருவர் தலைமையில் முஸ்லிம்கள் ஒன்றிணைவார்கள் என்ற ஒரு ஹதிஸ் உள்ளது. இது ஷகிஹ் தரத்திலான (Class A) ஹதிஸ்.
காலத்தில் பிந்தைய ஹதிஸ் நூல்களான அபு தாவூத் மற்றும் இப்னு மாஜா ஆகியவற்றில் மஹதி என்ற பெயர் இடம் பெறுவதுடன் அவருடைய இயற்பெயர் மற்றும் அடையாளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.இவைகள் அனைத்தும் ஹஸன் தரத்தில்(class B) அமைந்துள்ள ஹதிஸ்கள்.
ஸஹிஹ் மற்றும் ஹஸன் தரத்தில் அமைந்துள்ள ஹதிஸ்கள் இரண்டையுமே நாம் ஏற்றுக்கொள்ளலாம்.அதற்கு கீழ் நிலையிலுள்ள ஹதிஸ்கள் புறக்கணிக்கப்படும்.
அபு தாவூத்தில் இடம் பெற்றுள்ள ஹஸன் தரத்திலான ஹதிஸ்.
தூதர் அறிவித்தார்கள்: இறுதி காலத்தில் மக்களுக்கு அளவில்லாமல் வழங்கும் இமாம் ஒருவர் தோன்றுவார்.அவருடைய பெயர் என்னுடைய பெயராகும்.அவருடைய தந்தையின் பெயர் என் தந்தையின் பெயராகும்.
இந்த ஹதிஸின் படி வரவுள்ள இமாமின் பெயர் முகம்மது இப்னு அப்துல்லா.
ஹஸன் தரத்திலான ஹதிஸ் என்பதால் இமாம் உடைய பெயர் முகம்மது இப்னு அப்துல்லாவாக இருப்பதற்கான வாய்ப்புகள் 70% வரையில் உள்ளது.
அபுதாவூத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹஸன் தரத்திலான ஹதிஸ் : இமாம் மஹதியின் நெற்றியானது அகன்றதாகவும்,மூக்கானது கூர்மையானதாகவும் இருக்கும்.
இப்னு மாஜாவில் இடம் பெற்றுள்ள ஹஸன் தரத்திலான ஹதிஸின் படி இமாம் மஹதி அவர்கள் ஹசன்(ரலி) அவர்களின் வழித்தோன்றல் ஆவார்.
இப்னு மாஜாவில் இடம் பெற்றுள்ள ஹஸன் தரத்திலான ஹதிஸின் படி இமாம் மஹதி அவர்களின் தொடக்க கால வாழ்க்கை சொல்லிக்கொள்ளும் படியான அளவில் இருக்காது.பிற்பாதியில் இறைவன் அவரை நேர்வழிப்படுத்துவான்.
இமாம் மஹதி எப்போது வருவார்?
கலிபா(புனித ஆலயங்களின் பொறுப்பாளர்) ஒருவரின் மரணத்திற்கு பின் அந்த ஆட்சியை கைப்பற்ற அவருடைய மூன்று மகன்களும் அடித்துக்கொள்வார்கள் ஆனால் யாருமே வெற்றி பெற மாட்டார்கள்.குரசான் பகுதியிலிருந்து(ஆப்கானிஸ்தான்,வடகிழக்கு ஈரான்,வடமேற்கு பாக்,தஜிகிஸ்தானின் சிறு பகுதி) வரக்கூடிய முஸ்லிம்கள்- கருப்பு கொடியினர் வெல்வார்கள்.அப்போது இமாம் மஹதி அவர்கள் தன்னை தற்காத்துக்கொள்ள மதீனாவிலிருந்து தப்பித்து மக்காவிற்கு வருவார்கள் அங்கு மக்கள் அவரிடம் பய்அத்(ஆட்சியாளருக்கு மக்கள் அளிக்கும். உறதி மொழி) செய்வார்கள்.இமாம் ஆட்சி பொறுப்பை விரும்பாத நிலையிலும் மக்கள் அவரை கட்டாயப்படுத்துவார்கள்.
மக்கள் அவரிடம் பய்அத் செய்யும் போது கூட அந்த இமாம், தாம் தான் மஹதி என்பதை அறிய மாட்டார்கள்.
இந்த ஹதிஸை ஆழமாக நாம் பார்க்கும் போது சில விஷயங்கள் நமக்கு தெரிய வரும்.
1.மக்கள் தானாக முன் வந்து ஒருவரை கட்டாயபடுத்துகிறார்கள் என்றால் கண்டிப்பாக அவர் அன்றைய நாளில் மிகவும் பிரபலமான ஒருவராக இருக்க வேண்டும்.
2.உயிர் தப்பிக்க மதினாவிலிருந்து ஓடுகிறார் என்றால் அவருடைய உயிருக்கு அன்றைய அரசாங்கத்தால் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படும்.
3.குரசானிலிருந்து வரும் கருப்புக்கொடியினர் மஹதி அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
4.ஆட்சி செய்ய விருப்பமில்லாத போதும் மக்களின் வற்புறுத்தலால் தலைமை பொறுப்பை ஏற்பார்.
ஸஹிஹ் தரத்திலான ஹதிஸ் ஒன்றின் படி இமாமை தாக்குவதற்கு தூதரின் குலமான குரைஷி குலத்தினர் மக்கா நோக்கி வருவார்கள்.வரும் வழியில் பய்தா என்ற இடத்தில் பூமி பிளந்து அவர்களை விழுங்கும்.
இந்த நிகழ்விற்கு பின் தான் இமாம் தன்னை வாக்களிக்கப்பட்ட இமாமாக(இமாம் மஹதியாக) தன்னை பிரகடனப்படுத்துவார்.இஸ்லாமிய உலகத்தை ஒருங்கிணைப்பார்.
இதற்கு பின் சிரியாவிலுள்ள தாபிஹ் என்ற இடத்திற்கு செல்வார்.
முஸ்லிம் ஹதிஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஸஹிஹ் தரத்திலான ஹதிஸ்:
சிரியாவின் தாபிஹ் என்ற இடத்தில் எதிரிகள் 80 கொடியின் கீழ்(80 நாடுகளை சேர்ந்த எதிரிகள்) முற்றுகையிடுவார்கள்.அன்றைய தினம் மஹதி அவர்களுக்கு ஆதரவாக மதினாவிலிருந்து ஒரு படை புறப்படும்.சில ஹதிஸ்களில் குரசான் படை என்று உள்ளது.
அப்படியென்றால் குரசானிலிருந்து வந்து மதினாவில் முகாமிட்டிருக்கும் படைகள் என்று எடுத்துக்கொள்ளலாம்.
80 கொடிகள்.ஒவ்வொரு கொடியின் கீழும் 12,000 வீரர்கள்.மொத்தத்தில் 9,60,000 எதிரிகளை கொண்ட படையினை எதிர்த்து மஹதியின் படை போரிடும்.
தாபிஹ் என்ற சிறிய விவசாய கிராமத்தை 9,60,000 எதிரிகள் முற்றுகையிட்டால் அந்த போர் எந்த அளவிற்கு கடுமையாக இருக்கும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
போரில் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் போரை விட்டு விலகிவிடுவார்கள்.இறைவன் அவர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டான்.இரண்டாவது பிரிவினர் கொல்லப்படுவார்கள்.இறைவனிடம் அவர்கள் மிகச்சிறந்த உயிர்தியாகிகள் ஆவார்கள்.மூன்றாவது பகுதியினர் எதிரிகளை வெல்வார்கள்.இறுதியாக காண்ஸ்டாண்டிநோபிளைமுஸ்லிம்கள் கைப்பற்றி மல்ஹமா யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவார்கள்.
காண்ஸ்டாண்டிநோபிள் ஒரு துளி ரத்தம் கூட சிந்தாமல் அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கத்தால் வெற்றிக் கொள்ளப்படும்.
கோபம் கொப்பளிக்க தஜ்ஜால்(நமது நாள் போன்ற அவனது நாளில்) வெளிப்படுவான்.
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் மஹதி முற்றுகையிடப்படுவார்.ஏறக்குறைய மரணம் நிச்சயம் என்ற நிலைக்கு மஹதியும் முஸ்லிம்களும் தள்ளப்படுவர்.
பிர்அவ்ன் கையால் மரணம் நிச்சயமான போது கடல் பிளக்கப்பட்டு பனூ இஸ்ராயில்கள் காப்பாற்றப்பட்ட அதிசயத்தை போல நபி ஈஸா(அலை) அவர்களின் அதிசய வருகை முஸ்லிம்களை காப்பாற்றும்.
நபியின் வருகை தஜ்ஜாலுக்கு முடிவெழுதும் இதைப்பற்றி நாம் நபியின் வருகையும் தஜ்ஜாலின் முடிவும் என்ற தலைப்பில் விரிவாக காணலாம்.
நபி ஈஸா(அலை) அவர்களின் வருகை தஜ்ஜால் என்ற Subject ஐ முடிவுக்கு கொண்டு வரும்.இமாம் மஹதி என்ற Conceptக்கான தேவையையும் முடிவுக்கு கொண்டு வரும்.
குழு உறுப்பினர்களுக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.ஒர் மனிதர் மிகச்சிறந்த உண்மையாளராக (சித்தீக்) இருந்தாலும் சரி,ஆகச்சிறந்த உயிர்தியாகியாக(ஷஹீத்) இருந்தாலும் சரி,நேர்மையான ஆட்சியாளராக(அமீர்) இருந்தாலும் சரி,அறிவு நிறைந்த இமாமாக இருந்தாலும் சரி, அந்த இமாம் - மஹதியாகவே இருந்தாலும் சரி, இறைத்தூதர்களுடைய தர்ஜாக்களை(சிறப்புகளை) அடைவது என்பது இயலவே இயலாத காரியம்.
ஒரு தூதருக்கு இணையாக, சமமாக மற்ற ஒரு தூதர் இருக்கலாமே தவிர.ஒரு சாதாரண நல்லடியார் இறைதூதர்களுக்கு சமமாக மாட்டார்கள்.
தஜ்ஜால் வீழ்த்தப்பட்ட பின் ஜெருசலத்தை மையமாகக் கொண்டு, நபி ஈஸா(அலை) தலைமையில்,நபி இப்ராஹிம்(அலை) அவர்களின் மார்க்கத்தின் படி உலக ஆட்சி நிறுவப்படும்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கம் என்ற வார்த்தை சிலருக்கு கோபத்தையும், சிலருக்கு ஆச்சர்யத்தையும் வழங்கலாம்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை தான் நமது இறுதி தூதர் நபி முகம்மது(ஸல்) கொண்டு வந்தார் என்று குர்ஆன் கூறுகிறது.
இறுதியாக உலகம், நமது தந்தை நபி இப்ராஹிம் ( அலை) அவர்களின் மார்க்கத்தை கொண்டு தூய்மைப்படுத்தப்படும்.
தஜ்ஜாலைப்பற்றி பல தலைப்புகளில் விரிவாக கண்டுள்ளோம்.ஒரு குறிப்பிட்ட தலைப்புக்குள் கொண்டு வர முடியாத தஜ்ஜாலைப் பற்றிய பொதுவான ஹதிஸ்களின் விளக்கத்தை நாளை காணலாம்.குறிப்பாக தஜ்ஜால் என்று சந்தேகிக்கப்பட்ட
ஷாபி இப்னு ஷய்யாத் என்ற யூதனை பற்றி காணலாம்
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்.