தஜ்ஜால் தொடர் -பதிவு- 44
இப்னு சய்யாத் - தஜ்ஜால் என்று சந்தேகிக்கப்பட்டவன்.
கடந்த பதிவில் இப்னு சய்யாத்தை மக்கள் ஏன் தஜ்ஜால் என்று சந்தேகித்தனர் என்பதை பார்த்தோம்.இன்று இப்னு சய்யாத்துடனான தூதரின் சந்திப்பை காண்போம்.
இப்னு சய்யாத்தை மக்கள் தஜ்ஜால் என்று சந்தேகிக்க தொடங்கியதையடுத்து தூதர் அவர்கள் உமர்(ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு அவனை காணச்சென்றாரகள்.
இந்த சந்திப்பில் தூதர், இப்னு சய்யாத்திடம் சில கேள்விகளையும் இப்னு சய்யாத், தூதரிடம் ஒரு கேள்வியையும் கேட்கிறான்.
இந்த கேள்வி பதில் தொடர்பான செய்திகள் அனைத்தும் ஒரே ஹதிஸில் கிடைத்துவிடவில்லை.இப்னு சய்யாத்துடனான சந்திப்பை பற்றி பல ஹதிஸ்கள் உள்ளன.ஒவ்வொன்றிலும் ஒரு கூடுதல் தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.
இப்னு சய்யாத் சக சிறுவர்களுடன் மதீனா நகரில் விளையாடிக் கொண்டிருந்த போது, தூதர் அவர்கள் அவனுடைய முதுகை தட்டி அழைக்கிறார்கள.
அவனிடம்,நான் இறைவனுடைய தூதர் என்பதை ஏற்றுக்கொள்கிறாயா?என்று கேட்டார்கள் ஆனால் அவனோ, நான் இறைவனுடைய தூதர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நானும் உங்களை தூதர் என்று ஏற்றுக்கொள்கிறேன் என்று பதிலளித்தான்.
அதற்கு இறைத்தூதர் அவர்கள் நான் இறைவனையும் அவனுடைய வேதத்தையும் அவனுடைய தூதர்களையும் நம்புகிறேன் என்று பதிலளித்தார்.
பிறகு இப்னு சய்யாத்திடம், தூதர் அவர்கள் நீ எதை காண்கிறாய்? என்று வினவினார்கள்.
அதற்கு இப்னு சய்யாத், தூதரிடம் நான் நீர் பரப்பையும் அதன் மேல் ஒரு அர்ஷையும்(நாற்காலி) காண்கிறேன் என்றான்.
அந்த நாற்காலியை இப்லீஸின் ஆசனம. என்று தூதர் அறிவித்தார்கள்.
பிறகு உன்னிடம் யார் வருகிறார்கள் என்று தூதர் கேட்க என்னிடம் இரண்டு தீயவர்களும்,ஒரு நல்லவரும் வருகிறார்கள் அல்லது ஒரு தீயவரும் இரண்டு நல்லவரும் வருகிறார்கள் என்று இப்னு சய்யாத் பதிலளித்தான்.
பிறகு தூதர் அவர்கள் தோழர்களை நோக்கி இவன் குழம்பியுள்ளான் என்று பதிலளித்து அவனை புறக்கணிக்க கூறினார்கள்.
பிறகு இப்னு சய்யாத்,தூதரிடம் சொர்க்கத்தின் மண்ணை பற்றி விசாரிக்க, தூதர் அவர்கள் சொர்க்கத்தின் மண்ணானது வெள்ளை நிற கஸ்தூரி துகள்கள் என்று பதிலளித்தார்.
இதைக் கேட்ட இப்னு சய்யாத், உண்மை உரைத்தீர் அபுல் காசீமே என்று பதிலளித்தான்.
பிறகு தூதர் அவர்கள் மனதில் துக்கான்(புகை) என்ற வாசகத்தை நினைத்துக் கொண்டு என் மனதிலுள்ளதை சொல் என்று கேட்க இப்னு சய்யாத்தும் துக்,துக் ,துக் என்று கூறி தடுமாறினான்.
மற்றவர்களின் மனதிலுள்ளதை சரியாக கூறும் இப்னு சய்யாத்,தூதரின் மனதிலுள்ளதை கூற தடுமாறினாலும் ஓரளவு கண்டுபிடித்தான்.
இந்த பதிலை கேட்ட தூதர் அவர்கள், இப்னு சய்யாத்தை நோக்கி உன்னால் உனக்கு வழங்கப்பட்டதை மீறி செல்ல முடியாது என்று கூறி புறப்பட்டார்கள்.
அப்போது இப்னு சய்யாத்தின் மேல் கோபம் கொண்ட உமர் (ரலி)அவர்கள் இப்னு சய்யாத்தை கொலை செய்ய முனைந்து அதற்கு தூதரிடம் அனுமதி கேட்க,தூதர் அவர்கள் உமரிடம் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்கள்.
இவன் தஜ்ஜாலாக இருந்தால் இவனை உங்களால் கொலை செய்ய முடியாது.இவன் தஜ்ஜால் இல்லையென்றால் இவனை கொல்வதற்கு உங்களிடம் எந்த நியாயமும் இல்லை என்று பதிலளித்தார்கள்.
ஆக இப்னு சய்யாத் தஜ்ஜாலாக இருக்கலாம் என்ற சந்தேகம் தூதருக்கும் வந்தது என்பது தெளிவாகிறது.
"இவன் தஜ்ஜாலாக இருந்தால்" என்ற வார்த்தை இப்னு சய்யாத் தஜ்ஜாலாகவும் இருக்கலாம் அல்லது தஜ்ஜாலாக இல்லாமலும் இருக்கலாம் என்பதை விளக்குகிறது.
"இவன் தஜ்ஜாலாக இருந்தால்" என்ற வாசகம் ஒரு சந்தேக வாசகம் தான் ஆனால் இந்த சந்தேக வாசகம் ஒன்றை மட்டும் தெளிவாக விளக்குகிறது.
நடமாடக்கூடிய ஒரு மனிதனை தூதர் தஜ்ஜால் என்று சந்தேகித்தார் என்றால் அது தஜ்ஜால் வெளிப்பட்டுவிட்டான் என்பதை மட்டும் தெளிவாக விளக்குகிறது.
தஜ்ஜால் என்பவன் வெளிப்படாமல் இருந்தால் தூதர் யாரையும் தஜ்ஜால் என்று சந்தேகிக்க வேண்டிய அவசியமில்லை.அவர் ஒருவனை தஜ்ஜால் என்று சந்தேகிப்பது தஜ்ஜால் என்பவன் என்பது தூதரின் காலத்திலேயே வெளிப்பட்டுவிட்டான்(முதற்கட்டத்தில்) என்பதை தெளிவாக விளக்குகிறது.
நான் இந்த தொடரில் தஜ்ஜாலின் முதற்கட்டம் தூதரின் காலத்திலேயே தொடங்கிவிட்டது இதைப்பற்றி பின்பு விளக்குகிறேன் என்று பதிவு- 2ல் கூறியிருந்தேன்.ஆனால் இந்த பதிவு 44 ல் தான் இதை விளக்க முடிந்தது.
சரி.இப்போது ஒரு முக்கியமான கேள்வி நம் மனதில் எழும்புவதை தவிர்க்க இயலாது.
என்ன கேள்வி?
இப்னு சய்யாத் சம்பவத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே தமீமுத்தாரி அவர்கள் ஒரு தீவில் தஜ்ஜாலை அதிக பலம் கொண்ட ஒரு இளைஞனாக கண்ட செய்தியை தூதரிடம் தெரிவித்தார்.தூதரும் அதை அங்கீகரித்தார்கள்.
அப்படி இருக்க தூதர் ஏன் ஒரு சிறுவனை (இப்னு சய்யாத்) தஜ்ஜால் என்று சந்தேகிக்க வேண்டும்?.
சில ஆண்டுகளுக்கு முன்பு இளைஞனாக இருந்த ஒருவனை தஜ்ஜால் என்று அங்கீகரித்த தூதர் அவர்கள் ஏன் சில ஆண்டுக்கு பின் ஒரு சிறவனை தஜ்ஜால் என்று சந்தேகிக்க வேண்டும்.?
இந்த கேள்விக்கான பதிலையும் இப்னு சய்யாத் தொடர்பான மேலதிக விளக்கத்தையும் நாளை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்.......
தஜ்ஜால் தொடர்- பதிவு- 43; இப்னு சய்யாத் என்ற சிறுவனை, நபித்தோழர்களும் அன்றைய முஸ்லிம் மக்களும் தஜ்ஜால் என்று சந்தேகித்தனர். மக்கள் ஏன் அவனை,அவ்வாறு சந்தேகித்தனர்?:- https://e-funandjoyindia.blogspot.com/2020/12/43.html?spref=tw
Post a Comment