தஜ்ஜால் தொடர்- பதிவு- 43
இப்னு சய்யாத்-
தஜ்ஜால் என்று சந்தேகிக்கப்பட்டவன்
ஷப் இப்னு சய்யாத் என்ற சிறுவனை, நபித்தோழர்களும் அன்றைய முஸ்லிம் மக்களும் தஜ்ஜால் என்று சந்தேகித்தனர்.
மக்கள் ஏன் அவனை,அவ்வாறு சந்தேகித்தனர்?
இப்னு சய்யாத்திடம், அவன் சிறுவனாக இருந்த காலம் முதலே சில ஆச்சர்யமான நடவடிக்கைகள் இருந்தன.
1.பிறர் மனதில் நினைக்கும் சொல்லை சரியாக சொல்லுதல்.
2.எதிர்கால செய்திகளை,நிகழ்காலத்தில் சரியாக முன்னறிவித்தல்.
இது போன்ற விசித்திரமான நடவடிக்கைகளால், மக்கள் அவனை தஜ்ஜால் என்று சந்தேகிக்க தொடங்கினர்.
சரி.மக்களின் சந்தேகம் நியாயமானதா? என்று ஆராய்வோம்.
ஆய்வுகளை நாம் மேற்கொள்ளும் முன் தஜ்ஜால் தொடர்பான சில அடிப்படை செய்திகளை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
1.தஜ்ஜாலால்,மக்கா மற்றும் மதீனா ஆகிய இரு நகரங்களுக்குள் நுழைய முடியாது.
2.தஜ்ஜால் ஒரு யூதனாக வருவான்.
3.தஜ்ஜால் ஒரு மலடன்.அவனுக்கு குழந்தைகள் இருக்க மாட்டார்கள்.
4.தஜ்ஜால் முப்பது ஆண்டுகள் குழந்தையில்லாமல் இருக்கும் தம்பதிக்கு பிறப்பான்.
5.தஜ்ஜால்,ஜெருசலம் நகரில் தன்னை மீட்பராக அறிவிப்பான்.
இப்போது நாம் இப்னு சய்யாத் பற்றி ஆராய்வோம்.
இப்னு சய்யாத் முப்பது ஆண்டு மகப்பேறு இல்லாத தம்பதிக்கு பிறந்தான்.
இப்னு சய்யாத் யூதனாக பிறந்தான்.தூதரின் வாழ்நாள் வரையிலும் யூதனாகவே இருந்தான்.பின்னர் இஸ்லாத்தை தழுவினான்.
இப்னு சய்யாத் மதீனாவிற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தான்.அவன் சிறுவனாக இருந்த போதும் சரி,இளைஞனாக இருந்த போதும் சரி மதீனா நகருக்குள் அவன் நுழைந்துள்ளான்.
இப்னு சய்யாத் தன்னை, ஒரு போதும் மீட்பர் என்று அறிவித்துக்கொள்ளவில்லை.
இப்னு சய்யாத் திருமணம் செய்து பத்து குழந்தைகளை பெற்றுக் கொண்டான்.
இறுதியாக அவன் மக்கா நகரில் நுழைந்து ஹஜ்,கடமையையும் நிறைவு செய்தான்.
இப்போது இந்த ஹதிஸை கவனியுங்கள்.
இப்னு சய்யாத், ஹஜ் நிறைவேற்றி திரும்பும் வழியில் ஒரு இடத்தில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தான்.அப்போது அங்கிருந்த நபித்தோழர் அபுசயீத் என்பவர் இப்னு சய்யாத்தை கண்டதும் சற்று விலகி சென்றுவிட்டார்.அப்போது இப்னு சய்யாத் ஒரு கயிறை எடுத்துக்கொண்டு அபுசயீத்திடம்,என்னை மக்கள் தஜ்ஜால் என்று சந்தேகிப்பதால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி அதன்பின் சில வாதங்களை முன் வைத்தான்.
இறைத்தூதர் அவர்கள் தஜ்ஜாலால் மக்கா மற்றும் மதீனா நகருக்குள் நுழைய முடியாது என்று கூறியுள்ளார்கள்.ஆனால் நான் பிறந்ததே மதீனாவில் தான்.இப்போது மக்காவிலிருந்து தான் திரும்பிக் கொண்டிருக்கின்றேன் என்று கூறினான்.
மேலும் இறைத்தூதர் தஜ்ஜாலை யூதர் என்று கூறினார் ஆனால் நான் இன்று இஸ்லாத்தை தழுவி ஹஜ் நிறைவு செய்திருக்கிறேன் என்று கூறினான்.
மேலும் தஜ்ஜால் ஒரு மலடன் ஆனால் எனக்கு குழந்தைகள் உள்ளனர் என்று கூறினான்.
மக்கள் இதை கருத்தில் கொள்ளாமல் தன்னை தஜ்ஜாலாக கருதுவது தன்னை வேதனைப்படுத்துவதாக குமுறினான்.
இப்னு சய்யாத்தின் வாதங்களை ஏற்றுக்கொள்வதாக அபுசயீத் அறிவித்த போது,இப்னு சய்யாத் சப்தமிட்டு சிரித்தவாறு, தான் தஜ்ஜால் இல்லை என்றும் ஆனால் தஜ்ஜால் எங்கே இருக்கிறான்? என்றும் அவனுடைய பெற்றோர் யார்?என்றும் எனக்கு தெரியும் என்று கூறி, தஜ்ஜாலாக இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதை நான் மறுக்க மாட்டேன் என்றும் கூறினான்.
இதைக்கேட்டு கோபமடைந்த அபுசயீத், இப்னு சய்யாத்தை வசைபாடியவராக அங்கிருந்து வெளியேறினார்.
தஜ்ஜால் தொடர்பான ஹதிஸையும் இப்னு சய்யாத் உடைய வாழ்க்கையையும் ஒப்பிடும் போதும், இப்னு சய்யாத் அபுசயீதிடம் செய்த வாதங்களை பரிசீலிக்கும் போதும், மக்களின் சந்தேகம் தவறானதாக தோன்றும்.
இப்னு சய்யாத், தஜ்ஜாலாக இருக்க வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
மக்களின் சந்தேகத்தையும்,நபித்தோழர்களின் சந்தேகத்தையும் தவறு என்று நம்மால் ஒதுக்கிவிட முடியும்.
ஆனால் மதீனாவில் பிறந்த இப்னு சய்யாத்தை, நமது இறைத்தூதர் நபி முகம்மது(ஸல்) அவர்களே, இவன் தஜ்ஜாலாக இருப்பானோ என்று சந்தேகித்தார்.
இறைத்தாதருக்கு ஏற்பட்ட சந்தேகம் தஜ்ஜால் தொடரபான அடிப்படை ஹதிஸ்களில் நமக்கு ஒரு மிக முக்கிய மாற்று பார்வை ஒன்றை ஏற்படுத்துகிறது.
தஜ்ஜால் தன்னை மீட்பர் என்று (Messiah) என்று பிரகடனப்படுத்திய பின்பு தான் அவனால் இரண்டு புனித நகருக்குள் நுழைய முடியாது என்ற உண்மையை இது உணர்த்துகிறது.
தூதரின் சந்தேகம் நமக்கு எதையெல்லாம் விளக்குகிறது என்பதை பற்றியும் இப்னு சய்யாத்துடனான நமது தூதரின் சந்திப்பை பற்றியும் நாளை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்.......
தஜ்ஜால் தொடர் - பதிவு- 42 தஜ்ஜாலும் போர்களும் யார் இந்த இமாம் மஹதி?. இமாம் மஹதி எப்போது வருவார்?:-https://e-funandjoyindia.blogspot.com/2020/12/42.html?spref=tw
Post a Comment