ஜம்மு : ஜம்மு காஷ்மீர் கதுவாவில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆதரவான பேரணியில் கலந்துகொண்ட இரண்டு பாஜக அமைச்சர்கள் மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு பதவி விலகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா என்கிற கிராமத்தில், குஜ்ஜார் நாடோடி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, சிலரால் கடுமையான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மெளனம் காத்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.
கண்டனம் தெரிவித்த மோடி
இதுதொடர்பாக நேற்று டெல்லியில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீர் கதுவா மற்றும் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் சம்பவங்கள் தேசத்திற்கு அவமானத்தை தேடித்தந்துள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு
குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்ற பாஜக அமைச்சர்கள் இருவரை முதல்வர் மெஹபூபா பதவி நீக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தினார். எனவே இந்த விவகாரம் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி பேசுகையில், "சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் பொறுப்பற்ற சிலரின் பேச்சு மற்றும் செயல்களால் சட்டப்பூர்வ நடவடிக்கையில் தடை ஏற்படுத்த முடியாது. விசாரணை விரைவாக மேற்கொள்ளப்பட்டு நீதி வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா
இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிடிபி மற்றும் பாஜக கூட்டணியில், அமைச்சர் பதவியில் இருந்த இரண்டு பாஜக அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். தொழிற்துறை அமைச்சர் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் வனத்துறை அமைச்சர் லால் சிங் இருவரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் நடத்திய பேரணியில் கலந்து கொண்டதால் அவர்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, பதவி விலகல் கடிதத்தை நேற்று முதல்வரிடம் அளித்தனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதுதொடர்பாக, அம்மாநில பாஜக தலைவர் சத் ஷர்மா பேசுகையில், இரண்டு அமைச்சர்களும் இந்து பேரணியில் கலந்துகொண்டது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்றும், ஆனால் அவர்கள் அப்படி கலந்துகொண்டிருக்கக்கூடாது என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் பதவி விலகல் கடிதத்தை முதல்வர் மெஹபூபா முஃப்தி ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment