HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday, 3 April 2018

நான் ஏன் இந்த தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு விலக வேண்டும்???



தொழுகையோ இன்னபிற இபாதத்களோ குறைவாய் இருந்த சிறு பிராயத்தில், மார்க்கத்தில் எமக்கு பிடிப்பினை ஏற்படுத்தித் தந்தது தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்கள்.

மார்க்கம் என்றால், அறிஞர்கள் சொல்வது மட்டும் தான், நமக்கெல்லாம் எதுவும் புரியாது என்கிற பிரம்மையில் இருந்த காலகட்டத்தில், குர் ஆன் ஹதீஸை என் போன்ற பாமரர்கள் கைகளில் தவழச் செய்தது சகோ. பிஜெ கொண்டிருந்த எளிய அணுகுமுறை.

ஏகத்துவம் என்றால் வெறுமனே தர்காவுக்கு செல்லாமல் இருப்பது என்கிற மேலோட்டமான ‍புரிதலுடன் மட்டும் இருந்த எனக்கு தவ்ஹீதின் அனைத்து பரிணாமங்களையும் புரிய வைத்தது அவரது எழுச்சிமிகு உரைகள் மற்றும் வீரியமிக்க எழுத்துக்கள்.

குர் ஆனை ஒளு இல்லாமல் தொடலாமா கூடாதா என்கிற மடமையான சர்ச்சையில் இந்த சமூகம் ஒரு பக்கம் வீழ்ந்திருக்க, மற்றொரு பக்கமோ, காஃபிர்கள் உள்ளத்தில் கூட இந்த குர் ஆன் சென்று சேர்வதற்கு காரிணியாய் இருந்த சகோ. பிஜெவின் தர்ஜுமா நம்மை மெய்சிலிர்க்க வைத்தது.

ஒவ்வொரு கொள்கையுடையவர்களும் தங்கள் கருத்துக்கு ஆதரவாக குர் ஆன் ஹதீஸை தான் காட்டுகிறார்கள்,
எனவே அனைத்தும் சரி, நாம் உண்டு, நம் இபாதத் உண்டு என்று இருப்போம் என்பதாக அரை முஸ்லிமாக மார்க்க அறிவை பெறத் துவங்கிய காலங்களில், சத்தியத்திற்கு எதிராக எந்த ஆதாரமும் இருக்கவே இருக்காது என்கிற ஆணித்தரமான புரிதலை எமக்களித்தது தவ்ஹீத் ஜமாஅத் களம் கண்ட விவாதங்கள்.

ஹதீஸ் கலையா? அது நமக்கெல்லாம் புரியாத பாடம் என்று எண்ணி அதை விட்டும் தூரமாய் போன சமூகத்தை இந்த ஜமாஅத்தானது ஹதீஸ்கள் குறித்த ஆய்வில் ஈடுபட வைத்தது.

மார்க்க அறிவினை மதரசா கல்வியுடன் சுருக்கிக் கொண்ட ஆலிம்சாக்களை மட்டுமே கண்டு வளர்ந்த நான், அனுதினமும் ஆய்வில் கழித்த தவ்ஹீத் அறிஞர்களை கண்ட போது வியப்பின் உச்சிக்கே சென்றேன்.

உலகமே எதிர்த்தாலும், சத்தியம் இது தான் என்று தெரிந்த பிறகு அதை எவ்வித தயக்கமும் இன்றி சமுதாயத்தின் முன் எடுத்தியம்பிய துணிச்சலை ஜகாத் உள்ளிட்ட ஆய்விகளின் போது கண்டு மெய் சிலிர்த்தேன்.

பிஜெ அன்றைக்கு ஒன்று சொன்னார், இன்றைக்கு மாற்றி சொல்கிறார் என்கிற எதிரிகளின் விமர்சனம், எம்மை இன்னும் அவர் விஷயத்தில் நெருக்கமாகவே ஆக்கியது.
மதரசா கல்வியோடு மார்க்க அறிவுத் தேடலை முடித்துக் கொண்டவர்களுக்கு என்றைக்கும் ஒரே கருத்து தானே.. மாறவா போகிறது என்று அப்போதெல்லாம் அவர்களைக் குறித்து ஏளனம் பேசிக் கொள்ளும் மனம் !

பதவி ஆசை இல்லா பண்பு,
தலைவர் என்பதில் எந்த பகட்டும் இல்லாமை, வருக வருக என்கிற கோஷம் இல்லை,
மேள தாளங்கள் கிடையாது,
தாரை தப்பட்டைகள் இல்லை,
பொன்னாடைகள் இல்லை,
மேடையில் அமர்ந்திருப்பவர்களை வரவேற்கும் முறை கிடையாது,
யாருக்காகவும் எழுந்திருக்கக் கூடாது என்கிற உயரிய நபிவழி,
தவறு செய்த ஒருவர் ஜமாஅத்தின் தலைவர் என்றாலும் தயவு தாட்சணியமின்றி அவரை தூக்கி வீசக் கூடிய நேர்மை..
அரசியல் தலைவரே வந்தாலும், சுய கெளரவத்தை விட்டுக் கொடுக்காமல் அவரை சந்திக்கும் மாண்பு,
ஜால்ரா இல்லை, நெளிவு சுழிவு இல்லை,
ஜமாஅத்திற்கு கிடைத்திருக்கும் அதிகார வர்க்கத்தின் அங்கீகாரத்தைக் கூட தங்கள் சுய இலாபத்திற்காக ஒரு போதும் பயன்படுத்திடாத நிர்வாகிகள்..

இவையெல்லாம் நான் வேறெந்த இயக்கத்திலும் காணாத ஒன்று !

பல அடி, உதைகளுக்குப் பிறகு, தியாகத்தினாலும், இரத்தச் சிதற‌ல்களினாலும் உருவாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கான முதல் இயக்கமான தமுமுகவை கூட, கொள்கைக்காக விட்டு விலகிட கடுகளவு தயக்கம் கூட காட்டாத அறிஞர்கள், நம் கண் முன் தனித்துவம் பெற்றார்கள்.
 

அனைத்து இயக்கங்களும் பிஜெவை திட்டுவதிலேயே பொழுதை கழித்த, கழித்துக் கொண்டிருக்கிற காலத்தில்,
இஸ்லாத்திற்கு எதிராக தோன்றிய ஒவ்வொரு கொள்கையையும் வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்தெறியும் உன்னத பணியில் தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே ஈடுபட்டதை கண்ட போது உள்ளம் பெருமிதம் கொண்டது.

சத்தியத்தை நிலைநாட்ட முபாஹலா எனும் குர் ஆனிய வழிமுறை துவங்கி, பரேலவி, மதுஹப், தரீக்கா, மவ்லூது, மீலாது, தர்கா வழிபாடு, காதியானிசம், நாத்திகம், ஹிந்துத்துவம், கிறுத்தவம், அஹ்லே குர் ஆன், போன்ற, நம் சமூகத்தில் களைகளாய் தோன்றிய எல்லா கொள்கைவாதிகளுடனும் நேருக்கு நேராய் விவாதம் செய்து சத்தியத்தை உறுதி செய்த இந்த ஜமாஅத் எம் மனதில் உயர்ந்தது.

ஹசரத்திடம் கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது என்கிற சமூகத்தை மட்டுமே இஸ்லாமிய சமூகமாக கண்ட எமக்கு, இந்த ஜமாஅத்தின் அறிஞர்களிடமே கூட நேருக்கு நேராய் கேள்விகள் கேட்டு உண்மையை கண்டறிகின்ற சூழலை பெற்றது நமக்கு பெருமையாய் இருந்தது.

தான் கொண்டிருந்த கொள்கையிலேயே உறுதியும் பிடிமானமும் இல்லாத சமூகத்தின் மத்தியில், அவன் என்ன சொல்றான், இவனது கொள்கை என்ன, இந்த இயக்கம் அதற்கு என்ன ஆதாரம் வைக்கிறது, அது எதனால் தவறு என்பதையெல்லாம் அடுக்கடுக்காக அறிந்து, பிறருக்கு போதிக்கவும் செய்கிற பயிற்சியினை தவ்ஹீத் ஜமாஅத் இந்த சமூகத்திற்கு தந்திருப்பது வியப்புக்குரிய ஒன்று.

எத்தனை வெட்டுக் குத்துக்கள்.
எத்தனை அடி உதைகள்
எத்தனை ஊர் விலக்குகள்
எத்தனை ஜனாசா அடக்கம் மறுப்புகள்.

குடும்பத்தில் எதிர்ப்பு, தந்தை தாய் கூட புறக்கணிக்கும் நிலை
உறவினர்கள் செய்யும் உதாசீனங்கள்

என எது நடந்தாலும், அனைத்தையும் விட கொள்கை தான் பெரிது என்று நெஞ்சுறுதியுடன் நிற்கின்ற இளைஞர் படையை இந்த ஜமாஅத் உருவாக்கியிருக்கிறதே, அதற்கு ஈடான தியாகமும் அற்பணிப்பும் வேறு எந்த இயக்கத்திடமும் நாம் காணாத ஒன்று !

இந்த ஜமாஅத்தும், இந்த ஏகத்துவ பிரச்சாரமும் இச்சமூகத்தில் வேரூன்றுவதற்கு முன்னால் ஃபித்ரா வசூல் என்கிற ஒன்றை இந்த சமூகம் கண்டிருக்குமா?
அது அனைவரின் மீதும் கட்டாயக் கடமை என்பதையே ஏகத்துவம் மலர்ந்த பிறகு தான் பலருக்கும் தெரியவே செய்யும்.

ரத்த தானம் செய்த ஜமாஅத்தை இதற்கு முன் நாம் கண்டிருக்கிறோமா?
இரத்தத்தை தானம் செய்வது ஹராம் ஒபரேசன் ஹராம்,கல்வி கற்பது ஹராம் ,முகத்தை திறப்பது ஹராம் என்று ஃபத்வா வழங்கப்பட்ட ஜாஹிலியத்தில் தானே நாமெல்லாம் வீழ்ந்திருந்தோம்?

கூட்டுக் குர்பானி என்கிற திட்டத்தை இதற்கு முன் எவராவது அறிந்திருக்கிறார்களா?
வட்டியில்லா கடனுதவி திட்டத்தை எந்த இயக்கமாவது இந்த சமூகத்தில் அறிமுகம் செய்திருக்கிறதா?

ஆதரவற்ற அநாதை குழந்தைகளை,  முதியோர்களை தத்தெடுக்கும் உன்னத பணியில் எந்த  ஜமாஅத்துகளாவது இதற்கு முன் தங்களை ஈடுபடுத்தி நாம் பார்த்திருக்கிறோமா?

ஒன்றும் வேண்டாம்..

வாங்கிய வரதட்சணையை திருப்பி கொடுக்கும் இறையச்சமிக்க சமூகமாக இந்த சமூகத்து இளைஞர்கள் மாறியிருக்கிறார்களே, இதற்கு முன் இந்த நிலையை இந்த சமுதாயம் கனவிலாவது எண்ணிப் பார்த்திருக்குமா?

இல்லை. இதையெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தில் தான் நான் முதன்முதலாய் கண்டேன்.

ஐம்பது வருடம் பிந்தங்கியிருக்கின்ற ஒரு சமுதாயம்.
கல்வியறிவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம்
இன்றைக்கும் பீடி சுற்றியே பிழைப்பை ஓட்டும் சமூகம்..

இவர்களிடையே இந்த ஜமாஅத் உருவாக்கிய விழிப்புணர்வு சாதாரணமல்ல.

வரதட்சணை எதிர்ப்பு புரட்சி
இலங்கை முஸ்லீங்களின் உரிமைகள்,உலக முஸ்லீங்களுக்கான குரல் குறித்த விழிப்புணர்வு
உரிமைக்காக போராட வேண்டும் என்கிற உயரிய‌ குணம்
சமுதாயத்தில் நம்மை சுற்றி நடக்கும் அவலங்கள்,
உரிமை மீறல்கள்,
அரசியல் வஞ்சனைகள்,
மத துவேஷங்கள்

அனைத்தையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று இந்த ஜமாஅத் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.

கோழைகளாய் இருந்த இந்த சமூகத்தை நெஞ்சுரத்துடன் எதையும் தாங்கும் இதயமாய் மாற்றியது இவ்வாறு பெறப்பட்ட விழிப்புணர்வினால் தான் என்பதை எண்ணுகையில், இந்த ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் இன்னமும் பெருமை கொள்கிறது மனம்.

தெருமுனை பிரச்சாரம் துவங்கி மார்க்க பிரச்சாரத்தில் பல்வேறு பரிணாமங்களை இந்த ஜமாத் செய்து காட்டியிருக்கிறது என்றால் அது எமக்கு மிகையல்ல.

இலங்கை எங்கும வீதிக்கு வீதி பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், இலங்கையை கடந்து, இந்தியாவில் , , மலேசியாவில், வளைகுடா நாடுகளில், ஐரோப்பிய கண்டங்களில், அமெரிக்காவில்..
என ஆங்கில அறிவு கூட இல்லாத இந்த ஜமாஅத் அறிஞர்கள், இந்த தஃவாவினை கொண்டு சென்றிருக்கும் தொலவு கற்பனையில் அடங்காதது.

இன்றைக்கும், நாங்கள் தஃவாவிற்கு வந்திருக்கிறோம் என்று ஒருவரிடம் சொன்னால், நீங்க தவ்ஹீத் ஜமாஅத்தா? என்று தான் அவர் திருப்பிக் கேட்பார் என்கிற அளவிற்கு, எந்த இயக்கமும் தஃவா என்கிற ஒன்றை வெறுமனே பிஜெ எதிர்ப்பு கூட்டமாக நடத்தும் இக்காலத்தில், அல்லாஹ் நமக்கு விதியாக்கியிருக்கின்ற‌ நன்மையை ஏவி தீமையை தடுக்கின்ற இந்த நற்காரியத்தை எந்த தொய்வுமின்றி சிங்கள சமூகத்திடம் வீரத்துடன்
தைரியமாக செய்து வருகின்ற ஒரே ஜமாஅத்தாக தவ்ஹீத் ஜமாஅத் எம் உள்ளத்தில் மிளிர்கிறது.

முஸ்லிம்கள் என்றால் அடங்கி ஒடுங்கி வாழ வேண்டும் என்றே நான் சிறு வயதுகளில் எண்ணியிருந்தேன்.
ஆனால், நமக்கான முகவரியை ஆள்வோர் கண் முன் நிலைநிறுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்.
ஆள்வோரை,பொதுபல சேனா போன்ற இனவாத இயக்கங்களை கண்டு நாம் அச்சப்பட்ட காலம் போய், முஸ்லிம்களின் எழுச்சி ஆள்வோரை மிரள செய்த காலங்களை பின்னோக்கும் போது மயிர்கூச்செரிகிறது.

மனிதர் என்கிற முறையில் தவறுகளுக்கே அப்பாற்பட்ட இயக்கமாக எதுவும் இவ்வுலகில் இருக்க முடியாது என்ற போதிலும், சத்தியத்தை உள்ளச்சத்தோடு இவர்கள் சொல்வார்கள் என்று என்னில் முழு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது  குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் அல்குர்ஆனின் கண்ணியத்தையும்,நபியின் கண்ணியத்தையும் பாதுகாப்பதற்காக அந்த பிரிவினை தான்.

எனது நம்பிக்கையை இந்த ஜமாஅத் சம்பாதித்து கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன.

 இன்றைய கணம், இதே நம்பிக்கையை மறு பரிசீலனை செய்து கொள்ள எண்ணுகிறேன்.

ஆனால்,

மறு பரிசீலனையில் அந்த நம்பிக்கை குறைவதற்கான எந்த காரணத்தையும் என்னால் கண்டறிய‌ முடியவில்லை.

ஏகத்துவக் கொள்கையில் எந்த வளைவு நெளிவும் இல்லை. இன்னும் உறுதியுடனே தான் செயல்படுகிறது.

சத்தியத்தை அதே உறுதியுடன் சொல்வதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் மேம்பட்டு தான் இருக்கிறது.

நிர்வாகிகளின் எளிமையான வாழ்க்கை முறையில் மாற்றத்தை காண முடியவில்லை.
அன்றும் இன்றும் பதவி மோகம் கொண்டவர்களாய் அவர்களை பார்க்க முடியவில்லை.

கொள்கையில் சமரசம் செய்யும் போக்கினை காண முடியவில்லை.
சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இயக்கமாக அன்றைக்கு திகழ்ந்த இந்த ஜமாஅத்தில் இன்றைக்கும் எந்த மாற்றமும் இல்லை.

அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது என்கிற உயரிய தத்துவத்தில் வீறு நடை போடக் கூடிய ஒரே ஜமாஅத்தாக இலங்கை அளவில் தவ்ஹீத் ஜமாஅத் ஒன்று மட்டுமே தான் எம் கண் முன் நிற்கிறது.

நான் ஏன் இன்னொரு ஜமாஅத்தை நாட வேண்டும்? நான் ஏன் இந்த ஜமாஅத்தை விட்டு விலக வேண்டும்?

மேற்கூறிய அனைத்து செயல்திட்டங்களையும் செய்து காட்டிய ஒரு வரலாற்றை எந்த ஜமாஅத்தாவது காட்ட முடியுமா?
என்றால், தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு விலகி அதில் சேர்ந்து கொள்ளலாம்.

அப்படி ஏதேனும் இருக்கிறதா?

இஸ்லாத்தின் அஸ்திவாரமான திருக் கலிமாவிலேயே உறுதியும் தெளிவும் காட்டக் கூடிய ஒரு இயக்கம் தமிழ் பேசும் இவ்வுலகில் இல்லையெனும் போது, நான் ஏன் இந்த ஜமாஅத்தை விட்டு விலக வேண்டும்?

அட, தவறுகளே இருக்கட்டுமே.. இந்த ஜமாஅத் ஒன்றும் மலக்குகளைக் கொண்டு நடத்தப்படவில்லையே, தவறுகளுக்கு அப்பாற்பட்ட ஜமாத்தாக வலம் வருவதற்கு?
ஆதம் நபியின் வழித்தோன்றல்கள் தானே நாமெல்லாம்...

தவறுகள் இருப்பது தான் நாம் மனிதர்கள் என்பதற்கும், அல்லாஹ் தான் நம்மையெல்லாம் கட்டுப்படுத்துகிறான் என்பதற்குமான சான்று எனும் போது, தவறுகள் இருக்கத் தான் செய்யும்.
ஆனால், அவையெல்லாம் சுட்டிக்காட்டினால் திருத்தப்படக் கூடிய  தவறுகள். இஸ்லாத்தின் அடிப்படையை தகர்த்திடாத தவறுகள்.
இந்த ஜமாஅத்தில் பத்து தவறை காட்டுவதாக இருந்தால், மற்றொரு ஜமாஅத்தில் நூறை நான் காட்டுவேனே, ஆயிரத்தை காட்டுவேனே, இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைக்கிற தவறுகளை மூட்டை மூட்டையாக மற்ற மற்ற இயக்கங்களில் நான் காண்கிறேனே,

நான் ஏன் இந்த ஜமாஅத்தை விட்டு விலக வேண்டும்?

தவ்ஹீத் ஜமாஅத் இந்த சமூகத்திற்கு கிடைத்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி தான் என்னால் சொல்ல முடியுமே தவிர, நான் எப்படி இதிலிருந்து விலக முடியும்???

என்னை சீர்ப்படுத்தியது இந்த ஜமாஅத் !
என்னை மார்க்கத்தில் பிடிப்புள்ளவனாக மாற்றியது இந்த ஜமாஅத் !
எனது அமல்களை செம்மையாக்கிக் கொள்ள பயிற்சியளித்தது இந்த ஜமாஅத் !
ஏகத்துவத்தின் முழு பரிணாமங்களையும் எனக்கு போதித்தது இந்த ஜமாஅத் !

நான் ஏன் இந்த ஜமாஅத்தை விட்டு விலக வேண்டும்???



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com