Happy Birthday to dear KAMAL HASSAN SIR.
தமிழ் சினிமாவின் செல்வமாக, 60 ஆண்டுகளுக்கு முன்னர் களத்தூர் கண்ணம்மா என்கின்ற படத்தில், “செல்வம்”, என்னும் கதாபாத்திரத்தில், களமிறங்கிய கலைஞானி, சினிமா என்கின்ற பெரும் உலகத்தின் “அபூர்வ ராக”மாக, “விஸ்வரூபம்” எடுத்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
கமல்ஹாசன் என்னும் “கலைஞன்” சினிமா என்கின்ற கலை வடிவத்தை சரியான வடிவ நேர்த்தியுடன் கையாண்டு பிரவாகமெடுத்த “மகாநதி”. நிழலாக இருக்கும் இலக்கியத்தை, நிஜப்படுத்திய உலக சினிமா “நாயகன்”- தான் “நம்மவர்”, கமல் ஹாசன் . ‘உலக நாயகன்’ என்று, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதன் பின்னணியில், கலைஞானியின், சினிமா என்கின்ற கலை வடிவத்திற்கு தன்னையே அர்ப்பணித்த நேர்த்தி, சினிமாவின் கலைப்பூர்வமான நுணுக்கங்களை அழகுற கையாள்வதற்கான முனைப்பு, சினிமா என்னும் கனவு தொழிற்சாலையில் “நானும் ஒரு தொழிலாளி”, என்கின்ற உழைப்பு போன்ற அத்தனை அம்சங்களும் அழகுற “அரங்கேற்றம்” கண்டுள்ளது நிதர்சனம்.
தமிழ் சினிமாவின், இலக்கியமாக திகழும் கலைஞானி கமல்ஹாசன், சினிமா வானில் மின்னி மறையும், நட்சத்திரமாக மட்டுமல்லாமல், ஒரு “மூன்றாம் பிறையாக “. இன்றும் திகழ்வதை இன்னும் ஒரு நூற்றாண்டுக்கும் , ” நினைத்தாலே இனிக்கும்”. சினிமாவும் , நம்மவரான, கலைஞானியும், “அபூர்வ சகோதரர்கள்”. “அவர்கள்”- நமக்கு ரசனைக்கான “ராஜபார்வை” தந்தார்கள். தமிழ் சினிமாவின் பால பாடத்திற்கான “குரு”-வாக திகழ்ந்து, இந்திய திரையரங்க வெண்திரைகளில், கடந்த 60 ஆண்டுகளாக விரிந்திட்ட பலவிதமான, “குணா”திசயங்களை , “மனிதரில் இத்தனை நிறங்களா”, என்கின்ற விந்தையான வியப்பில் ஆழ்த்தியவர், நம்மவர் “கலைஞானி” கமல்ஹாசன்.
முள்ளும் மலரும் நிறைந்த தமிழ் சினிமாவின் பாதையில், “செந்தாழம்ப்பூவில் வந்தாடும் தென்றலை..”, தனது சொந்த செலவில் தமிழ் சினிமாவின், சாமானிய ரசிகன் மீதும் தவழவிட்டவர் கமல்ஹாசன். இதனை இயக்குனர் இலக்கணமான மகேந்திரன் ஆமோதிக்கின்றார். மேலும், தமிழ் சினிமாவில், கூச்சல்கள், இரைச்சல்கள் சூழ்ந்திருந்த சூழலில், “சலங்கை ஒலி”-யினை சங்கமிக்கவைத்தவர், கலைஞானி கமல்ஹாசன். தமிழ் சினிமா என்னும் கலைவடிவ ஆழ்கடலில், “கடல் மீன்கள் ” போல் அவரின் சகல கலா திறன்கள் நிறைந்திருந்தாலும், “சிப்பிக்குள் முத்து”, என்று தன்னையும், தனது தனித்திறனையும் பலவித பரிசோதனைக்கு உட்படுத்தியவர், கலைஞானி கமல்ஹாசன்.
கலைஞர்களுக்கு சமூக அக்கறை வேண்டும் என்கின்ற விஷயத்தை முதன் முதலாக முன்னெடுத்தவர், நம்மவர், கலைஞானி கமல்ஹாசன் அவர்கள். கமல்ஹாசன் ரசிகர் நற்பணி மன்றங்களின் மூலமாக, இலங்கைத் தமிழர்களுக்கான பேரணியினை நடத்தியது, ரத்த தானம் முகாம்கள் நடத்துவது, தமிழ் இலக்கியத்தின், ஜாம்பவானாக, ஜெயகாந்தன் , ஞானக்கூத்தன், புவியரசு உள்ளிட்ட முன்னோடிகள் கூட ஆர்வமுடன் கலந்து கொள்ளும் அளவிலான சிறப்பு வாய்ந்த இலக்கிய கூட்டங்கள் நடத்துவது என்றும், “மைய்யம்”, என்னும் பத்திரிக்கை, நடத்தப்பட்டது போன்ற பல நலப்பணிகள் நடத்திவந்த நம்மவர், கலைஞானி, “உன்னால் முடியும் தம்பி”, என்னும் திரைக்காவியத்தில், “அமைதி புரட்சி இயக்கம்”, என்கின்ற பெயரில் தமிழகத்தின் தற்”போதை”ய, குடி போதை கலாச்சாரத்திற்கு தகுந்த சாட்டையடி கொடுக்கும் விதமாகவும், குடி போதைக்கெதிராக போராடுகின்ற, ‘உதயமூர்த்தி’, என்னும் கதையின் நாயகன், கதா பாத்திரத்தில், சிறப்பான பங்களிப்பினை இன்றளவும் பொருந்துகின்ற விதத்தில், இயக்குனர் சிகரம்,கே.பாலச்சந்தர் அவர்களின் கைவண்ணத்தில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கருத்து விருந்து அளித்தது மட்டுமல்லாமல், அந்த படம் வெளிவந்த 1987-ம் ஆண்டிலிருந்து, “தமிழக காமல்ஹாசன் நற்பணி இயக்கம்”, என்னும் சமூக இயக்கத்தை தனது தலைமையில் கட்டியமைத்தார், கலைஞானி கமல்ஹாசன்.
தமிழகத்தின் இன்னும் நிகழ்கின்ற ஜாதி ஆணவ வன்மத்திற்கு, பதிலடியை, 1992-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று , இந்திய சினிமாவின் முது பெரும் படைப்பாளிகளாக, ஷ்யாம் பெனெகல் மற்றும் திலீப் குமாரை வைத்து, வெளியிட்ட, தேவர் மகன், படத்தில், “புள்ள குட்டீங்கள படிக்க வைங்கடா..”, என்று நம்மவர் அன்று அறிவுறுத்தியதை, பின்பற்றியிருந்தால், இன்று நிகழும் பெருவாரியான, ஜாதி ஆணவ படுகொலைகள் தடுக்கப்பட்டிருக்கும். மேலும், காந்தியடிகள் எந்த கொள்கைக்கு சொந்தம், எந்த கொள்கைக்கு எதிரி என்று, “ஹே ராம்”, படத்தில், கலைஞானி வெளிப்படுத்தியதை, 2000-ம் ஆண்டில் புரிந்துகொண்டிருந்தால், நாம் 60-ம் ஆண்டு கலைஞானியின், கலை வாழவை கொண்டாடுவது மேலும் அர்த்தப்படும், மதிப்பு கடும்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதியில், 42 ஆண்டுகளுக்கு முன்னர், இலக்கிய உரை ஆற்றிட சென்ற கலைஞானி, ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில், தனது அறிவார்ந்த உரையினை பொழிந்து, தமிழ சினிமா ரசிகனின் கௌரவத்தையும், தமிழனின் அறிவார்ந்த ரசனையையும் உலக அளவில் உயர்த்தியும், ஏற்றியும் வைத்தார் உலக நாயகன். குவியும் புகழாக, சத்யபாமா பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்டம் பெற்று, தமிழ் சினிமாவின் சராசரி ரசிகர்களுக்கான தகுதியை முன்னெடுத்து, புது முகவரி தந்துள்ளார்.
அடுத்த வினாடி புதிர்களில், மூழ்கிக்கிடக்கும் நமது நெஞ்சங்களை, “அன்பே சிவம்”, என்று கலைஞானியுடனான, கலை பூர்வமான உறவின் மூலமாக தமிழ் கலாச்சாரம், கலை வடிவம், படைப்புத்திறன் சார்ந்த விழுமியங்களில், தமிழ் சினிமா கண்டெடுத்த , “கலைஞானி”, இன்னும், இன்னும் தமிழ் கலை சார்ந்த, படைப்பு இயக்கங்களுக்கான, “தலைவன் இருக்கின்றான்”, என்று, கலை, படைப்பு, அர்ப்பணிப்பு என்று, தன்னை தமிழ் சமூகத்திற்கு ஒப்படைத்து, 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கலைஞானி வாழும் சம காலத்தில் நாம் வாழ பிறந்தோம், கலை பூர்வமாக கடைத்தேற்றம் பெற்றோம் என்று பூரித்திடும் வகையில் நம்மை சிலிர்ப்பு கொள்ளும் உணர்விற்கு இன்றளவும் ஆழப்படுத்துபவர், உலகின் ஒரே
“உலக நாயகன்”, “கலைஞானி”, கமல்ஹாசன், என்பது தமிழ் சமூகத்திற்கு என்றென்றும் புகழ் மகுடமாகும்..
Post a Comment