Dinesh Karthik Indian Cricket Team
சென்னை: நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியின் மூலம் தினேஷ் கார்த்திக் ஒரே நாளில் ஹீரோவாகி இருக்கிறார்.
கடைசி பாலில் அவர் அடித்த சிக்ஸ் மட்டும் அல்ல, அந்த கடைசி இரண்டு ஓவர்களில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடிதான் நம்மை ஒரு மோசமான பாம்பு டான்சில் இருந்து காப்பாற்றியது. தினேஷ் கார்த்திக் தன்னுடைய வாழ்நாள் முழுக்க எதிர்ப்பார்த்த ஒரு தருணம் நேற்று நடந்தது.
கிரிக்கெட் பார்க்காத, கிரிக்கெட் என்றால் என்ன என்று கூட தெரியாத நபர்களுக்கு கூட தினேஷ் கார்த்திக் சில முக்கியமான விஷயங்களை சொல்லிக் கொடுத்துள்ளார். 14 வருடம் அவர் பொறுமையாக கற்றுக்கொண்ட 6 விஷயங்கள்.
டோணி இல்லைனா சேர்த்துக்கலாம், இதுதான் எப்போதும் தினேஷ் கார்த்திக்கின் நிலைமை. டோணியைவிட கீப்பிங்கில் தினேஷ் கார்த்திக் சிறந்தவர் என்று நிறைய கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறியும் கூட டோணியின் தேவை காரணமாக தினேஷுக்கு வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் கொஞ்சம் கூட மனம் தளராமல் வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் ஆடிக்கொண்டுதான் இருந்தார்.
சிலருக்குத்தான் சரியான நேரம் வரும். தினேஷ் கார்த்திக் போல பொறுத்திருந்து, புறக்கணிப்புகளை சகித்துக் கொண்டு, தன் நேரத்திற்காக காத்திருப்பவர்களுக்கு அந்த நேரம் கண்டிப்பாக வரும். ஆனால் அதுவரை சோர்ந்து போகாமல், சரியான பயிற்சியுடன் காத்து இருக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் 14 வருடம் செய்த பயிற்சிதான் அந்த சிக்ஸ்.
14 வருடமாக டிகேவிற்கு கிடைக்காத அந்த வாய்ப்பு நேற்று கிடைத்தது. அந்த 8 பால்தான் அவரின் புறக்கணிப்பிற்கு முடிவுகட்ட கிடைத்த வாய்ப்பு. வாய்ப்பு கிடைக்காத வலி, 7 வது வீரராக இறக்கப்படுவதன் அவமானம், புதிய வீரர்களின் கேலி எல்லாவற்றையும் உடைக்க ஒரே பால் தான் கிடைக்கும்.... அதில் சிக்ஸ் அடித்தால்தான் கோப்பை!
நேற்றைய கடைசி இரண்டு ஓவர்களில் தினேஷ் காட்டிய 'திமிர்' உச்சக்கட்டம். ''நான் இந்தியன் டீம் பிளேயர், நீ பங்களாதேஷ், நான் இப்படித்தான் அடிப்பேன்'' என்ற தோரணையில் வந்த பந்து எல்லாவற்றையும் வானவேடிக்கை காட்டினார். அந்த திமிர்தான், பொதுவாக தினேஷிடம் இருக்கும் நடுக்கம், நேற்று ஒரு திமிராக வெளிப்பட்டது. அதுதான் அவரின் வைரல் வெற்றிக்கு காரணம்.
நேற்றைய போட்டியில் விஜய் சங்கர் மிகவும் மோசமாக சொதப்பினார். நேற்றைய நாள் அவருடையது இல்லை, அவ்வளவே. அவருக்கும் ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் தினேஷ் கார்த்திக், அந்த மோசமான சூழ்நிலையில் கூட விஜய் சங்கரை அமைதியாக வழிநடத்தியது, அதுதான் சிறந்த தலைமைப்பண்பு. கடைசி நேரத்தில் கோபப்பட்டு, தானும் குழம்பாமல் நேர்த்தியாக அந்த சூழ்நிலையை கையாண்டார்.
கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த தினேஷ் கார்த்திக் நாகினி டான்ஸ் ஆடவில்லை, கத்திக் கொண்டே ஓடவில்லை, எதிரணி வீரரிடம் சென்று சண்டை போடவில்லை. ஆனால் மிக அமைதியாக பேட்டை தூக்கி மேலே காட்டினார். அதுதான், அந்த அனுபவமிக்க கொண்டாட்டம்தான் வெற்றிக்கு பின்பாக தேவை. வெற்றிக்கு தகுதியாக இருக்கும் போது, அந்த பக்குவம் தானாக வந்து சேரும்.
Post a Comment