HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 10 March 2018

DAJJAL WILL COME SOON.

மஸீஹ் தஜ்ஜால்..

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வெளிக் கிளம்புவதற்கு முன்னதாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான்.

தஜ்ஜாலுக்கு பல பெயர்கள் உள்ளன. சிலர் அவனை ‘ஸாயிப்பின் ஸய்யாத்’ என்றழைகின்றனர். பிறிதொரு ரிவாயத்தின்படி அப்துல்லாஹ் என்றழைக்கப்படுகின்றான். மேலும் அவன் ‘மஸீஹ்’ என்றும் அழைக்கப்படுகின்றான். காரணம் அவனது இரண்டு கண்களில் ஒன்று தடவப்பட்டுள்ளது. இன்னொரு கருத்தின்படி குறுகிய காலத்தில் அவன் பூமியைக் கடப்பதனாலும் ‘மஸீஹ்’ என்று அழைக்கப்படுகின்றான்

 மேலும் ‘கத்தாப்’ பொய்யன் என்று பெயர் சொல்லப்படுகின்றான் இன்னும் சமூகத்திற்கு எச்சரிக்கை செய்த பல பெயர்களும் அவனுக்குள்ளன.

 நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக  நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உபைதா (ரழியல்லாஹு அன்ஹு) ,

நூல்: புகாரி 3057 , 3337 , 6173 , 7127 ,3338 , 3440 , 3441 , 4403 , 5902 , 6173, 6999 , 7026 , 7123 , 7127 , 7128 , 7131 , 7407 , 7408 , 3057 நூல்கள் – திர்மிதீ, அபூதாவூத்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டது  முதல் அந்த நாள் வரும் வரையிலும்  தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை  என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹு)

நூல்: முஸ்லிம் 5239

தஜ்ஜாலின் வருகையின் அறிகுறிகள்

தஜ்ஜால் வருவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு காலநிலை மாற்றங்கள் தோன்றும் முதலாம் வருடத்தில் வானம் பெய்யும் மழையில் 1/3 பகுதியையும் பூமி தாவரத்தில் 1/3 பகுதியையும் தடுத்துக் கொள்ளும்.

 இரண்டாம் வருடன் 2/3 பகுதி வானமும் பூமியும் மூன்றாம் வருடம் வானமும் பூமியும் அனைத்தையும் தடுத்துக் கொள்ளும். வானத்தில் இருந்து ஒரு துளி மழை கூட இறங்காது பூமியில் பசுமையே இருக்காது பூமி செம்புத்தரை போலும் வானம் கண்ணாடி போலும் காட்சி தரும் மக்கள் பசிதாகத்தால் மரணிப்பர் மக்களிடையே கொலையும் குழப்பங்களும் தோன்றும் மனிதர்கள் நன்மையை ஏவுவதையும் தீமையை தடுப்பதையும் விட்டு விடுவர்.

 அன்று சூரியன் பல நிறங்களில் உதயமாகும். ஒரு தரம் சிவந்து, மறுதரம் மஞ்சலாகவும், கறுப்பாகவும் தோன்றும் பூமி நடுங்கத்தொடங்கும்.

 தஜ்ஜாலின் வருகை

 நிராகரிப்பின் சிகரம் கீழ்த்திசையில் இருக்கிறது. என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) நூல்கள்: புகாரி, முஅத்தா

 வழி கெடுக்கக் கூடிய தஜ்ஜால் என்னும் ஒற்றைக்கண்ணன், மக்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் கீழ்த்திசையில் தோன்றுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) நூல்: அஹ்மத்

மேற்கில் உள்ள குராஸான் என்ற பகுதியிலிருந்து தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள்  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

நூல் : திர்மிதீ 2163

 இஸ்பஹான் தேசத்தில் ‘யஹூதிய்யஹ்’ என்ற கிராமத்தில் மல்ஊன் தஜ்ஜால் தோன்றுவான். பிறிதொரு ஹதீஸியின் படி கிழக்கில் குறாஸான் என்ற ஊரில் தோன்றுவான் என்றும் சொல்லப்படுகின்றது.

 அவன் தோன்றியதும் மூன்றுமுறை சத்தமிடுவான். இதைக்கிழக்கில் மேற்கில் வாழும் அனைவரும் கேட்பர். அவனுடன் விபச்சாரத்தில் உருவான பிள்ளைகள் சேர்ந்து கொள்வர். அவனை அகமாகப் பெண்களும், காட்டறபிகளும், யஹூதிகள் கோபத்திற்குரியவர்கள், மூதேவிகள், சூனியக்காரர்களுமே பின்பற்றுவர்.

 நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தினரில் எழுபதினாயிரம் பேர் பின்பற்றுவர் அவர்கள் பச்சை உடை அணிந்திருப்பர். அவனுக்குச் சூழால் எழுபதாயிரம் பேர் இசைக்கருவிகளுடன் செல்வர் பூமியின் கடவுள் என்று சொல்லிக் கொண்டு பவனி வருவர். அதை அவனைப் பின்பற்றுபவர்களே கேட்பர்.

 அவன் ஒரு கழுதையில் ஏறி வருவான் அதன் நீளம் ஒரு இலட்சத்து பதினெட்டு முழமாகும். அதன் இடது கால் வெள்ளியாலும் அதன் இரு செவிகளுக்கும் இடையிலுள்ள அகலம் நாற்பது முழமும் இருக்கும். அதன் நெற்றியில் ஓரம் உடைந்த கொம்பிருக்கும். அதன் வழியாக பாம்புகளும், நட்டுவக்காலிகளும் வெளியாகும் பெரும் ஆயுதங்களையும் சுமந்து செல்லும். மிருகங்களில் கழுதையைத் தவிர அதைப் பின் தொடராது.

தஜ்ஜாலின் உருவ அமைப்பு

‘நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும், அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன் அல்லன், ஆனால் தஜ்ஜாலின் வலது கண் திராட்சை போன்று சுருங்கி இருக்கும்’ என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இன்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு நூல்கள் – புகாரீ, முஸ்லிம்.

ஊனமடைந்த கண், மூக்கை ஒட்டிய ஓரத்தில் கடினமாக சதைக் கட்டி ஒன்று தொன்படும் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்கூறி உள்ளனர் : நூல்கள் – முஸ்லிம், அஹ்மத்.

‘ஊனமடையாத கண், பச்சை நிறக் கண்ணாடிக் கற்கள் போல் அமைந்திருக்கம்’ ( அஹ்மத்).

‘அவன் வெள்ளை நிறத்தவனாக இருப்பான், அவனின் உடலமைப்பு கவர்ச்சியாக அமைந்திருக்கும்’ (அஹ்மத்).

‘சற்று குண்டான உடலுடையவனாக இருப்பான்’ (முஸ்லிம்).

‘பின்புறத்திலிருந்து பார்த்தால் அவனின் தலைமுடி அலை அலையாய் இருப்பதாகத் தெரியும் (அஹ்மத்).

‘பரந்த நெற்றியுடையவனாக இருப்பான்’ (பஸ்ஸார்)

‘குள்ளமாகவும் கால்கள் இடைவெளி அதிகம் உள்ளவனாகவும் இருப்பான்’ (அபூதாவூத்).

‘தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே ‘காஃபிர்’ என்று எழுதப்பட்டிருக்கும். எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து மூஃமின்களும் அதைப் படிப்பார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு நூல்-முஸ்லிம்.

தஜ்ஜால் பிறந்து விட்டான்

தஜ்ஜால் இனிமேல் பிறப்பவன் அல்ல. ஏற்கனவே பிறந்தவன் ஆவான். அவன் தற்போதும் இருந்து வருகிறான். ஸஹாபாக்களில் ஒருவரான தமீமத்தார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நேரில் ஏதேச்சையாக கண்டுள்ளார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் (தொழுகைக்கான) அழைப்பாளர் ‘அஸ்ஸலாத்து ஜாமிஆ’ (தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது) என்ற அறிவித்தார். இதைக் கேட்ட நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடன் தொழுதேன். தொழுது முடிந்ததும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சிரித்துக் கொண்டே மிம்பரில் அமர்ந்தார்கள். ‘அனைவரும் தொழுத இடத்திலேயே அமருங்கள்’ என்று கூறிவிட்டு ‘நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா? என்று கேட்டார்கள், ‘அல்லாஹ்வும் அவனின் தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று நாங்கள் கூறினோம்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களை அச்சுறுத்தவோ ஆர்வமூட்டவோ உங்களை நான் ஒன்று கூட்டவில்லi. தமீமுத்தாரி முன்பு கிருத்தவராக இருந்தார். அவர் வந்து இஸ்லாத்தில் இணைந்து விட்டார். தஜ்ஜால் பற்றி உங்களுக்குச் கூற வந்ததுக்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். (அவர் என்னிடம் கூறியதை நீங்களும் கேளுங்கள்).

லக்ம், ஜுகாம் ஆகிய சமூகத்தில் முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன் (புயல் காரணமாக) ஒரு மாதகாலம் அலைகளால் அலைகழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் சமயம் ஒரு தீவில் ஒதுங்கினோம். கப்பலில் வைத்திருந்த சிறு தோணிகள் மூலம் அந்த தீவில் நுழைந்தோம். அப்போது உடல் முழுவதும் மயிர்கள் நிறைந்த ஒரு பிராணி எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் காரணமாக அதன் மலஜலம் பாதைகளை (உறுப்புக்களைக்) கூட அவர்களால் அறிய இயலவில்லை.

அந்தப் பிராணியிடம் அவர்கள், ‘உனக்கு ஏற்பட்ட கேடே நீ என்ன பிராணி?’ என்று கேட்டனர். ‘ஜஸ்ஸாஸா’ என்று அது கூறிவிட்டு, ‘நீங்கள் இதோ இந்த மடத்தில் உள்ள மனிதனிடம் செல்லுங்கள், அவர் உங்களைக் காண்பதில் ஆர்வம் காட்டுவார்’ என்றும் அப்பிராணி கூறியது. அந்த மனிதனின் பெயரையும் கூறியது. அந்தப் பிராணி ஒரு பெண் ஷைத்தானாக இருக்குமோ என்று பயந்தோம்.

நாங்கள் அந்த மடத்தை நோக்கி விரைந்தோம். அங்கு சென்றதும் ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை இதுவைர நாங்கள் பார்த்ததே இல்லை. இரண்டு கரண்டை கால்களுக்கும் முட்டுக்கால்களுக்கும் இடையே தலையைச் சேர்த்து கழுத்தில் இரும்பால் கட்டப்பட்டிருந்தான், ‘உனக்கு ஏற்பட்ட கேடே! ஏனிந்த நிலை’ என்று கேட்டோம்.

அதற்கு அந்த மனிதன் ‘(எப்படியோ) என்னைப் பற்றி அறிந்து விட்டீர்களே! நீங்கள் யார்? எனக் கூறுங்கள்’ என்றான். ‘நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் நாங்கள் பயணம் செய்தபோது, ஒரு மாதம் கடல் அலையால் அலைகழிக்கப்பட்டோம். இப்போது தான் இந்த தீவிற்கு வந்தோம். அடர்ந்த மயிர்கள் நிறைந்த ஒரு பிராணியைக் கண்டோம். அது, நான் ஜஸ்ஸாஸா, இந்த மடத்தில் உள்ள மனிதரைப் பாருங்கள்’ என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம்’ என்று கூறினோம்.

‘பைஸான் என்ற இடத்தில் உள்ள பேரீத்தம் மரங்கள் பயனளக்கிறதா? என்று கூறுங்கள்’ என அந்த மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்று கூறினோம். அதற்கு அம்மனிதன் ‘விரைவில் அங்குள்ள மரங்கள் பயனளிக்காமல் போகலாம்’ என்றான். ‘சூகர் எனும் நீருற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரை விவசாயத்திற்கு பயன் படுத்துகிறார்களா? என்று கேட்டான். அதற்கு நாங்கள் ‘ ஆம், தண்ணீர் அதிகமாகவே உள்ளது. அங்குள்ளோர் அத்தண்ணீர் மூலம் விவசாயம் செய்கின்றனர்’ என்று கூறினோம்.

‘உம்மி சமுதாயத்தில் தோன்றக்கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக்கூறுங்கள்’ என அம்மனிதன் கேட்டான். ‘அவர் மக்காவிலிருந்து புறப்பட்டு, தற்போது மதீனாவில் உள்ளார்’ என்று கூறினோம். ‘அரபியர்கள் அவருடன் போர் புரிந்தார்களா?’ என்று அம்மனிதன் கேட்டான். ஆம் என்றோம். ‘போரின் முடிவு எப்படி இருந்தது?’ என்று கேட்டான். ‘அவர் தன் அருகில் வசித்த அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார்’ என்று கூறினோம். ‘அவருக்கு அவர்கள் கட்டுப்படுவதே சிறந்தது’ என்று அவன் கூறினான்.

நான் இப்போது என்னைப் பற்றிக் கூறுகிறேன். நான்தான் தஜ்ஜால். நான் (இங்கிருந்து) வெளிறே வெகு சீக்கிரம் எனக்கு அனுமதி தரப்படலாம். அப்பேது நான் வெளியே வருவேன். பூமி முழுதும் பயணம் செய்வேன். நாற்பது நாட்களில் எந்த ஊரையும் நான் அடையாமல் விட மாட்டேன். மக்கா, மதீனா இரு ஊர்களைத் தவிர. அந்த இரு ஊர்களும் எனக்கு தடுக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயற்சிக்கும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு வானவர் என்னை எதிர் கொண்டு தடுப்பார். அதன் வழிகள் அனைத்திலும் அதைக் காண்கானிக்கின்ற வானவர்கள் இருப்பர்’ என்று அம்மனிதன் கூறினான்.

இவ்வாறு தமீமுத்தாரீ ரழியல்லாஹு அன்ஹுதன்னிடம் கூறியதாகக் கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் கைத்தடியை மிம்பரில் தட்டிவிட்டு, ‘இது (மதீனா) தூய்மையான நகரம், தூய்மையான நகரம்’ என்று கூறினார்கள். ‘இதே செய்தியை நான் உங்களிடம் கூறி இருக்கிறேன் தானே’ என்று மக்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கேட்டதும், மக்கள் ‘ஆம்’ என்று பதில் கூறினர்.

அறிந்து கொள்க! நிச்சயம் அவன் சிரியா நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். அல்லது யமன் நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். இல்லை, இல்லை! அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என்று மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பாளர் : பாத்திமா பின்த் கைஸ் ரழியல்லாஹு அன்ஹு நூல் – முஸ்லிம்.

தஜ்ஜாலின் வித்தைகள்

‘தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும், நீக்குவான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். மக்களிடம் ‘நானே கடவுள்’ என்பான். நீதான் என் கடவுள் என்று ஒருவர் கூறினால், அவன் சோதனையில் தோற்றவனாவான். ‘அல்லாஹ் தான் என் இறைவன்’ என்று ஒருவர் கூறி, அதிலேயே அவர் இறந்தால், அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டவர் ஆவார்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸமுரா இப்னு ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு நூல்கள்-அஹ்மத், தப்ரானி.

‘வானத்திற்கு மழை பொழியுமாறு கட்டளையிடுவான், மழை பொழியும். பூமியை நோக்கி விளையச் செய்! என்பான், அது பயிர்களை முளைக்க வைக்கும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் ரழியல்லாஹு அன்ஹுநூல் – முஸ்லிம்.

அவனைப் பின்பற்றியவர்கள் தவிர, மற்ற மக்கள் மிகவும் வறுமையின் பிடியில் இருக்கும்போது, அவனிடம் மலைபோல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான், இன்னென்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் எனக் கூறும் நதி, உண்மையில் நரகமாகும், அவன் நரகம் என்று கூறும் நதியோ சொர்க்கமாகும். மழை பொழிந்திட வானத்திற்கு கட்டளையிட்டதும், மக்கள் பார்க்கும் போதே மேகம் மழை பொழியும். ‘இதைக் கடவுளைத் தவிர வேறுயாரும் செய்ய முடியுமா?’ என்று கேட்பான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நூல் அஹ்மத்.

‘ திடகாத்திரமான ஒரு இளைஞனை அவன் அழைத்து வாளால் இரண்டு துண்டுகளாக வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான். உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டு பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான் ” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரழியல்லாஹு அன்ஹு,

முஸ்லிம் 5228

இறந்தவர்களை அவன் உயிர்ப்பிப்பது ஒரே ஒரு தடவை தான் நிகழும். இதனால் தான் இரண்டாம் முறை அந்த நல்ல மனிதரை அவனால் கொல்ல இயலவில்லை. இறந்தவர்களை உயிர்ப்பிப்பது என்பது ஒரே தடவை மட்டுமே அவனால் செய்ய இயலும் ; தொடர்ந்து செய்ய இயலாது. ஒரு மனிதனைக் கொன்று அவனை உயிர்ப்பிப்பான். மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்கூறியதாக அன்ஸாரித் தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.

நூல்: அஹ்மத் 22573

.’.பின்னர் மக்களிடம் வருவான் (தன்னை கடவுள் என ஏற்கும்படி) அழைப்பான். அவனை மக்கள் ஏற்க மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகிச் செல்வான். காலையில் (அவனை ஏற்க மறுத்த) மக்கள், தங்களின் அனைத்துச் செல்வங்களையும் இழந்து நிற்பார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் ரழியல்லாஹு அன்ஹு நூல் – முஸ்லிம்.

‘தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ, அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதை நெருப்பு என்று காண்கிறார்களோ, அது சுவை மிகுந்த குளிர்ந்த தண்ணீராகும். உங்களில் ஒருவர் இந்த நிலையை அடைந்தால், நெருப்பு எனக் காண்பதில் விழட்டும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹுநூல்கள் – புகாரீ, முஸ்லிம்.

தஜ்ஜாலின் கேடுகளிலிருந்து பாதுகாக்கப்பெற்றவைகள்:

‘அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களுக்கும் அவன் செல்வான். ஆனால் மஸ்ஜிதுல் ஹராம், மதீனா பள்ளிவாசல், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிவால்களையும் அவனால் நெருங்க இயலாது’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் (அஹ்மத்).

‘மதினா நகருக்கு தஜ்ஜால் பற்றிய பயம் தேவை இல்லை. அன்றைய நாளில் மதீனாவுக்கு ஏழு நுழைவு வாயில் (பாதைகள்) இருக்கும். ஓவ்வொரு பாதையின் நுழைவாயிலிலும் இரண்டு (வானவர்கள்) இருப்பார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுநூல் – புகாரீ.

தஜ்ஜால் கீழ் திசையிலிருந்து மதீனாவை குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ‘ஷாம்’ பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கேதான் அவன் அழிவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு நூல்கள் – புகாரீ, முஸ்லிம்.

‘பமிரிகனாத் என்னும் இந்த உவர் நிலங்களுக்கு தஜ்ஜால் புறப்பட்டு வருவான். அப்போது அதிகமான பெண்கள் அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். எந்த அளவுக்கெனில், (அன்று) ஒவ்வொரு ஆணும் தனது மனைவி, தாய், மகள், சகோதரி, மாமி ஆகியோரிடம் சென்று அவர்கள் தஜ்ஜாலைப் பின்பற்றிச் சென்று விடக் கூடாது என அஞ்சி, அவர்களைக் கயிற்றினால் கட்டி வைப்பான்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு நூல் – அஹ்மத்.

கஸ்பஹான் பகுதியல் வாழும் யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி, அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு நுழைவுப் பாதைகள் இருக்கும். ஓவ்வொரு நுழைவு பாதையிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) தீய மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். பாலஸ்தீன் நகரின் ‘லுத்’ எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன்பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிவானாகத் திகழ்வார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு நூல்- அஹ்மத்.

மதீனா மூன்றுமுறை துளும்பும், அப்போது அதில் வாழ்ந்த முனாபிகீன்கள் அழிந்து விடுவர்.

 பின் தஜ்ஜால் பாபில் என்ற நகரில் நுழைவான் அங்கு கழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனை எதிர் கொள்வார்கள். அவர்களிடம் நான்தான் “றப்புல் ஆலமீன்” என்று தஜ்ஜால் சொல்வான். அதற்கு கிளுறு அலைஹிஸ்ஸலாம் நீ பொய் சொன்னாய். நீதான் பொய்யனான தஜ்ஜால் றப்புல் ஆலமீன் என்பவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். அவன் உன்னைப் போன்ற பொட்டைக் கண்ணன் அல்லன் என்பார்கள்

 இது தஜ்ஜாலுக்கு கோபத்தை ஏற்படுத்தவே அவர்களை கொலை செய்து விடுவான். பின் மக்களைப் பார்த்து நான் கொன்று விட்டேன். இவர் சொல்வதுபோல் இரு இறைவன் இருப்பின் இவரை உயிர்ப்பிக்கட்டும் பார்ப்போம் என்பான்.

 உடன் அல்லாஹ் தஆலா அவரை அதேவேளை உயிர்பிப்பான். உயிர்பிக்கப்பட்ட கிளுறு அலைஹிஸ்ஸலாம் எழுந்து நின்று தஜ்ஜாலே எனது இறைவன் என்னை உயிர்பித்து விட்டான் என்பார். அவரை அறுப்பதற்கு தஜ்ஜால் முனைந்தபோது கிளுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது செம்பால் ஒரு கவசத்தை இறைவன் ஏற்படுத்துவான். அவனால் அவரை அறுக்க முடியாமல் போகவே தஜ்ஜால் தோல்வியடைவான்.

 இதுபற்றி ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபி (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சொல்கையில் அறுக்கப்பட்டு உயிர் பெறுபவர் கிளுறு அலைஹிஸ்ஸலாம் அல்ல. அவர் ஈமான் நிரம்பப் பெற்ற ஒரு வாலிபராவார். அவரை கஷ்புடையவர்கள் கண்டு கொண்டுள்ளனர் என்றார்கள்.

அவனது மரணம்:

பின் தஜ்ஜாலின் தாக்குதலால் பிரிந்துசென்ற முஸ்லீம்கள் பைத்துல் முகத்தஸில் ஒன்று சேர்வார்கள். தஜ்ஜாலின் படைகளுடன் போர் தொடுப்பதற்கு தம்மைத் தயார் செய்யுமாறு மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வேண்டிக் கொள்வார்கள்.

 உடன் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் படைகளைத் தயார் செய்து தாமும் சென்று தஜ்ஜாலுடன் கடும் சமர் புரிவார்கள்.

 இச்சமரில் காபீர்களில் ஒரு இலச்சம்பேரும் முஸ்லீம்களில் முப்பதாயிரம் பேரும் கொல்லப்படுவார்கள் . மஹ்தீ அலைஹிஸ்ஸலாம்அவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தொடர்ந்து போராடுவது கஷ்டமாக இருக்கும், அதனால் பைத்துல் முகத்தஸில் நுழைந்து அதன் வாயில்களை மூடிக்கொள்வார்கள்.

 தஜ்ஜாலும் அவனது படைகளும் பைத்துல் முகத்தஸை அடையும்போது அங்கு காவலில் நிற்கின்ற மலக்குகள் அவர்களைத் துரத்தியடிப்பார்கள் உடன் மஹ்தீ (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் தோழர்களும் இறை பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்

 யா அல்லாஹ்! தஜ்ஜாலின் பித்னஹ்விலிருந்தும், அவனது சூழ்ச்சியிலிருந்தும் காப்பாற்றுவாயாக என்று.

 அப்போது இறைவனிடமிருந்து பின்வரும் செய்தி வரும் “ முஸ்லீம்களே! உங்களை இரட்சிப்பவரும், உதவி செய்பவரும் உங்கள் இறைவனிடமிருந்து வந்து விட்டார்” என்று இதைக் கேட்ட முஸ்லீம்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ்வுக்கு அருகில் உள்ள லுத்து என்னும் இடத்தில் வைத்து மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகன் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் அவனைக்  கொல்வார்கள்

 தஜ்ஜாலின் கேடுகளிலிருந்து பாதுகாப்பு பெற:

தஜ்ஜாலின் காலத்தை அடைபவர்கள் அவனிடமிருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறுவது என்பதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு  இரண்டு வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

 1.தொழுகையில் அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதனை செய்தார்கள். அதில் ஒன்று ‘ தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறைவா உன்னிடம் பாதுகாப்புக் கேட்கிறேன் ‘ என்பதாகும்.

நூல்: புகாரி 833 , 1377 , 6368 , 6375 ,6376 , 6377

 2.நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவில்கையில் ‘இறையடியார்களே! ஈமானில் உறுதியாக இருங்கள் உங்களில் யாராவது அவனைச் சந்தித்தால் “ஸூரத்துல் கஹ்ப்” அத்தியாயத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்றார்கள்.



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com