பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல், ஸ்ரீபிரியா போட்டியிடும் தொகுதிகள் நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் காண்கிறார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கும் வேட்பாளர்களின் நேர்காணல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் தேர்தல் பணிக்குழுவோடு சமூக செயற்பாட்டாளர்கள், இலக்கியவாதிகள் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற்றது.
நேர்காணலுக்கு பின்னர் 2 நாட்கள் மனு பரிசீலனை நடைபெற்றது. கமல்ஹாசன் தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் முழுக்க தகுதியின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்று முன்பே கூறி இருந்தார். அதன்படி வேட்பாளர் தேர்வில் கல்வித்தகுதி, தொகுதி மக்களுக்கு ஆற்றிய பணிகள் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 20-ந்தேதி கமல்ஹாசன் வெளியிட்டார்.
நாளை மாலை 6 மணிக்கு கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு வேட்பாளர் அறிமுக விழா மற்றும் மாற்றத்துக்கான துவக்கவிழா என்று கமல் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். முதல் பட்டியலில் 21 வேட்பாளர்கள் தான் இடம்பெற்று இருந்தனர். கமீலா நாசர்(மத்திய சென்னை), முன்னாள் காவல் அதிகாரி மவுரியா (வடசென்னை) இருவரை தவிர வேறு பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
குறிப்பாக, கமல்ஹாசன் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற போகும் அம்சங்கள் குறித்தும் எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் நாளை கோவை பொதுக்கூட்டத்தில் விடை கிடைக்கும் என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் திரள்கிறார்கள். பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் இன்று மாலை கோவை வருகிறார்.
கமல்ஹாசன் போட்டியிட இருப்பது தென் சென்னையிலா அல்லது ராமநாதபுரத்திலா என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். நாளை நடக்கும் இந்த கூட்டத்தில் தான் கமல், ஸ்ரீபிரியா, சினேகன், துணைத்தலைவர் மகேந்திரன் உள்ளிட்டவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்கள் தெரியவரும். கமல் ராமநாதபுரத்திலும் ஸ்ரீபிரியா தென் சென்னையிலும் மகேந்திரன் கோவையிலும் களம் இறங்கலாம் என்கிறார்கள்.
நாளை வேட்பாளர் பட்டியலுடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாக இருக்கிறது. அதனால் தான் மாற்றத்துக்கான துவக்கவிழா என்கிறார்கள். முதல் பட்டியலை வெளியிட்ட போதே கமல்ஹாசன் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் குறை கூறினார்.
புதிதாக ஒன்றுமே இல்லை. இவை எல்லாமே சிறு வயதில் இருந்தே நான் கேட்ட வாக்குறுதிகள் தான். இவற்றை நிறைவேற்றுவதற்கான வழி முறைகளை மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என்றார். எனவே கமல் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்போகிறார் என்பதை அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி இருக்கின்றன.
கமல் தனது கட்சிக்காக 100 பேச்சாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களில் நல்ல பேச்சாற்றல் மிக்கவர்கள், பொது மேடைகளில் பேச விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களிடம் நேர்காணல் நடத்தி, 100 பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த பேச்சாளர்கள் மூலம் இவர்களுக்கு 2 நாள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பொது மேடைகளில் நாகரிகமாக பேசுவது, மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள், திட்டங்களை மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துரைப்பது உள்ளிட்டவை குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு, அவர்கள் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
Post a Comment