சபரிமலை கோயிலில் இரு பெண்கள் வழிபட்டதையடுத்து கேரளாவில் கடும் வன்முறை வெடித்துள்ளது.அங்கு நடந்த பந்தில்,பாரதிய ஜனதா கட்சியினருக்கும்,மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களும் கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் கேரளாவில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த பதற்றம் தமிழ்நாடு,கேரள எல்லையிலும் நீடித்தது.
கேரளாவில் நடந்த பந்தின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் தமிழக எல்லையான களியக்காவிளையில் இன்று கேரள அரசு பேருந்து ஒன்று வந்தது.அப்போது அந்த பகுதியில் திரண்டு இருந்த பாரதிய ஜனதா தொண்டர்கள்,திடீரென கேரள அரசு பேருந்தை வழிமறைத்து,பேருந்தையும் அதன் ஓட்டுநரையும் தாக்க முற்பட்டனர்.இதனால் அந்த பகுதியில் பதற்றமும்,பரபரப்பும் ஏற்பட்டது.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்,பாரதிய ஜனதா தொண்டர்களை கலைந்து போகுமாறு எச்சரித்தனர்.
ஆனால் காவல்துறையினரின் பேச்சை கேட்காமல் பேருந்தை தாக்க முற்பட்டனர்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த,களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன், பாரதிய ஜனதா கட்சியினரைப் பார்த்து சிங்கம் சூர்யா ஸ்டைலில் வறுத்தெடுத்தார்.இதனை சற்றும் எதிர்பாராத பாரதிய ஜனதா தொண்டர்கள் அரண்டு போனார்கள்.அதற்கு மேல் அங்கிருந்தால் அடி நிச்சயம் என்பதை உணர்ந்த அவர்கள் சத்தமில்லாமல் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
அப்பாவி பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயன்ற பாரதிய ஜனதா தொண்டர்களை தனது அதிரடியால் கலைந்து போக வைத்த,களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகனை அங்கிருந்த மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
Post a Comment